குறித்த காலத்தில் வளர்ச்சி பணிகளை செய்யாவிட்டால் கோயில் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
குறித்த காலத்தில் வளர்ச்சி பணிகளை செய்யாவிட்டால் கோயில் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் எச்சரிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், செயலாளர் அசோக் டோங்ரே, கமிஷனர் பணீந்திரரெட்டி,  கூடுதல் ஆணையர்கள் வான்மதி, லட்சுமணன், திருமகள், இணை ஆணையர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது: கோயில்களுக்கான திருப்பணிகள் குறித்து பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகள் அடிப்படையில் திருப்பணி செய்யப்பட வேண்டிய கோயில்களுக்கு விரைவாக பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற  வேண்டும்.

கோயில்களுக்கு சொந்தமாக திருமண மண்டபங்கள் கட்டும் பணி, திருத்தேர் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் அலுவலர்கள் கண்காணித்து  பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் உள்ள  விலைமதிப்பற்ற சிலைகள் மற்றும் ஆபரணங்களைப் பாதுகாத்திட களவு எச்சரிக்கை மணி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் தீ தடுப்பு  உபகரணங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.

கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாப்பதுடன் அவற்றிலிருந்து பெறும் வருவாயை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள வரிகள் மற்றும் குத்தகை வசூல்  செய்திடவும் அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அவர் பேசினார்.   இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் டோங்ரே பேசுகையில், ‘கோயில்களுக்கான வளர்ச்சி பணிகளை குறித்த காலத்தில்  நிறைவேற்ற தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

.

மூலக்கதை