கோவை அருகே கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு துப்பாக்கி பயிற்சி: உளவுத்துறை வெளியிட்ட வீடியோக்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவை அருகே கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு துப்பாக்கி பயிற்சி: உளவுத்துறை வெளியிட்ட வீடியோக்கள்

கோவை: கோவை அருகே கேரளா வனப்பகுதியில் போலீசார், மாவோயிஸ்ட்கள் முகாமில் கைப்பற்றிய லேப்டாப்பை ஆய்வு செய்ததில், அங்கு கடந்த 3 ஆண்டுகளாக  துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்துள்ளதாக உளவுத்துறை வீடியோ வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகேயுள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் கார்த்திக், மாவோயிஸ்ட் தலைவன் என கூறப்படும்  சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மணிவாசகம், கர்நாடகாவை சேர்ந்த மதி, சுரேஷ் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக்(எ)சந்து(28), கர்நாடகாவை சேர்ந்த சோனா, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி(20), ஆகிய 3 பேர் குண்டு காயங்களுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடினர்.

அவர்களை போலீசார் தீவிரமாக தேடி  வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டைக்கு பின்னர் சம்பவ இடத்தில் பென் டிரைவ், லேப்டாப், செல்போன்கள், ஏராளமான டைரிகள் கைப்பற்றப்பட்டன.

அவற்றை உளவுப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பல  திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

லேப்டாப்பை ஆய்வு செய்தபோது அதில் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சுடுவது போன்றும், பயிற்சி பெறுவது போன்றும், ஏராளமான வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்துள்ளன.

அதனை வைத்து விசாரித்தபோது மாவோயிஸ்ட்களுக்கு  துப்பாக்கி பயிற்சி கொடுத்தது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை மாவோயிஸ்ட்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், ஏராளமான மாவோயிஸ்ட்களுக்கு தீபக் துப்பாக்கி பயிற்சி  கொடுத்ததாகவும் தெரிகிறது. தற்போது மாவோயிஸ்ட்கள் காட்டுக்குள் துப்பாக்கி பயிற்சி பெறுவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

போலீசார் சுட்டுக்கொன்றது மாவோயிஸ்ட்கள் இல்லை, அவர்கள் ஆதிவாசிகள்  என்ற பேச்சும் கேரளாவில் பரவலாக உள்ளது. அதனை மறுக்கவே உளவுத்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது துப்பாக்கிச்சூடு நடந்த மஞ்சகண்டி வனப்பகுதியில் ஒரு ஏகே-47 துப்பாக்கி, 6 நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அங்கு ஏராளமான ஆயுதங்கள் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறையினருக்கு  தெரியவந்துள்ளது.

எனவே தப்பியோடிய 3 பேரையும் கண்டுபிடித்தால் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் 3 பேரும் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்ற சந்தேகமும்  தற்போது எழுந்துள்ளது.

500 பேருடன் தொடர்பு

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தபோது, தமிழகம் முழுவதிலும் 500 பேர் மாவோயிஸ்ட்களுடன் செல்போனில் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்களுக்குள் பேசுவதற்கு ரகசிய வார்த்தையை  (கோட் வேர்ட்) பயன்படுத்தியுள்ளனர். அந்த வார்த்தை மாவோயிஸ்ட்களுக்கு மட்டுமே புரியும்.

மேலும் அவர்கள் தமிழகம் முழுவதும் ஏராளமானோரை மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்துள்ளதும் ெதரியவந்துள்ளது.

இது  குறித்து உளவுப்படை போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.

.

மூலக்கதை