விதிமீறி சென்றவர்கள் மீது எஸ்ஐ லத்தியை வீசிய விவகாரம்: கோவை எஸ்.பி 2 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விதிமீறி சென்றவர்கள் மீது எஸ்ஐ லத்தியை வீசிய விவகாரம்: கோவை எஸ்.பி 2 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: விதியை மீறி சென்றவர்கள் மீது எஸ். ஐ லத்திய வீசிய விவகாரத்தில் கோவை எஸ். பி 2 வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி  சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சர்தார் (25). இவர் தன்னுடைய நண்பர்கள் இருவருடன் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சென்று அங்கு வேலையை முடித்து விட்டு மாலை கோவைக்கு  திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தென்சங்கம்பாளையம் சந்திப்பில் கோட்டூர், எஸ். ஐ சம்பந்தம் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நபர்கள் போலீசார் நிறுத்தியும் வாகனத்தை நிறுத்தாமல்  சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த எஸ். ஐ கையில் வைத்திருந்த லத்தியை வீசியுள்ளார். இதில் அவர்கள் நிலை தடுமாறி முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளனர்.

இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.   இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதில் சர்தார் என்பவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் லேசாக காயம் ஏற்பட்டது.

இதையடுத்து எஸ். ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ். பி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது.

இச்செய்தியை  பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து இச்சம்பவம் குறித்து  கோவை எஸ். பி 2 வாரத்திற்குள் உரிய விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

.

மூலக்கதை