கர்த்தார்பூரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி?: உளவுத்துறை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கர்த்தார்பூரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி?: உளவுத்துறை எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: கர்த்தார்பூரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் குருதுவாரா இந்தியர்களுக்காக திறக்கப்பட உள்ளது. முதல் பயணிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்திர சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 150 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உட்பட 575 பேர் கர்தார்பூர் யாத்திரை செல்ல தயாராக உள்ளனர். அனைத்து இந்தியர்களுக்கும் பாஸ்போர்ட், வீசா, இல்லாமலேயே அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கர்தார்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினை வாத பயங்கரவாதிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கர்தார்பூர் தொடக்கவிழா பற்றி பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் வீடியோவில் 3 காலிஸ்தான் தீவிரவாதிகள் தோன்றுகின்றனர். ஓரிடத்தில் பொற்கோவிலுக்குள் சுட்டு கொல்லப்பட்ட பிந்தரன்வாலேயின் படம் கொண்ட சுவரொட்டியும் காணப்படுகிறது. இதன் மூலமாக இந்தியாவுக்கு மறைமுகமான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கர்தார்பூர் செல்லும் வி.வி.ஐ.பிகள் உட்பட அனைத்து சீக்கியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு மத்திய அரசு வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. காலிஸ்தான் விடுதலை படை, பாபா கால்சா, லஷ்கர் இ தொய்பா, ஜெய் ஷே முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கர்தார்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து புனிதமான வழிபாட்டு தலத்தை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

மூலக்கதை