இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்., முயற்சி?

தினமலர்  தினமலர்
இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்., முயற்சி?

வாஷிங்டன்: இந்தியா மீது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்த. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், ஐ.எஸ்.ஐ.எஸ்., கோரசன் பிரிவு முயற்சித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின், தேசிய பயங்கரவாத ஒழிப்பு மைய பொறுப்பு இயக்குனராக இருப்பவர், ரஸ்செல் டிராவர்ஸ். இந்திய வம்சாவளியை சேர்ந்த, பார்லிமென்ட் உறுப்பினர், மேகீ ஹசன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு, டிராவர்ஸ் அளித்த பதிலின் விபரம்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இவற்றில் சில, கூடுதல் தொழில்நுட்பத்துடன் செயல்படுகின்றன.

ஐ.எஸ்., அமைப்பின் ஒரு பிரிவு தான், ஐ.எஸ்.ஐ.எஸ்., கோரசன். இந்த அமைப்பு, ஆப்கனை தலைமையிடமாக வைத்து, தெற்காசியாவில் செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ்.,பிரிவுகளில், கோரசன் பிரிவுதான், மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இதில், 4,000க்கும் அதிகமான பயங்கரவாதிகள் உள்ளனர். ஆப்கனுக்கு வெளியே தாக்குதல் நடத்தும் முயற்சியில், கோரசன் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.


சில ஆண்டுகளுக்கு முன், கோரசன் பயங்கரவாதிகள், அமெரிக்காவின், நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அமெரிக்கா போலீசார், அதை தடுத்து முறியடித்து விட்டனர்.ஐரோப்பிய நாடான, சுவீடனின் தலைநகர், ஸ்டாக்ஹோமில், கோரசன் பயங்கரவாதிகள், 2017ல் நடத்திய தாக்குதலில், ஐந்து பேர் இறந்தனர் .கடந்த ஆண்டு, இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றை நடத்த, இவர்கள் முயற்சித்தனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனால், இந்தியாவில், கோரசன் பயங்கவாதிகள் முயற்சித்த தாக்குதல் பற்றிய வேறு எந்த விபரத்தையும், டிராவர்ஸ் தெரிவிக்கவில்லை. இந்திய வம்சாவளி எம்.பி.,யான ஹசன், கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததுடன், அமெரிக்க நாட்டின் மீது தாக்குதல் நடத்தவும், கோரசன் பயங்கரவாதிகள் திட்டமிட்டது, எனக்கு தெரிய வந்தது என, ஹசன், டிராவர்சிடம் தெரிவித்தார்.

மூலக்கதை