டில்லி செல்கிறார் அஷ்வின் * அணி மாற்றம் உறுதியா | நவம்பர் 06, 2019

தினமலர்  தினமலர்
டில்லி செல்கிறார் அஷ்வின் * அணி மாற்றம் உறுதியா | நவம்பர் 06, 2019

புதுடில்லி: வரும் ஐ.பி.எல்., தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், டில்லி அணியில் இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் ‘நம்பர்–1’ டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 32. ஐ.பி.எல்., தொடரில் சென்னை (2008–15), புனே (2016–17) அணிக்காக விளையாடினார். தற்போது பஞ்சாப் அணி கேப்டனாக உள்ளார். 2018 (7வது இடம் ), 2019 (6வது) என கடந்த இரு சீசனில் பஞ்சாப் பெரியளவு சாதிக்கவில்லை. 

இதனால் அஷ்வினை கழற்றி விட நிர்வாகம் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின. இதை பஞ்சாப் அணி மறுத்தது. பின் புதிய பயிற்சியாளராக ‘ஜாம்பவான்’ கும்ளே நியமிக்கப்பட்டார். இவர் ‘சீனியர்’ சுழற்பந்து வீச்சாளர் வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இதனால் அஷ்வின் டில்லி அணிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இந்த ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஐ.பி.எல்., தொடரில் சாதித்து, இந்திய ஒருநாள் அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளாராம்.

 இவருக்குப் பதில் டில்லி அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்ட் (ரூ. 2.2 கோடி), சுசித் (ரூ. 20 லட்சம்) பஞ்சாப் அணிக்கு செல்வர் எனத் தெரிகிறது.

அஷ்வினுக்கு பஞ்சாப் அணியில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ. 7.6 கோடி தரப்படும்  எனத் தெரிகிறது. பஞ்சாப் அணி சக உரிமையாளர் மோகித் பர்மன் கூறுகையில்,‘‘அஷ்வினை டில்லிக்கு மாற்றும் திட்டம் பேசப்பட்டு வருவது உண்மை தான். இதுகுறித்து பயிற்சியாளர் கும்ளே தான் இறுதி முடிவெடுப்பார்,’’ என்றார்.

மூலக்கதை