அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு சறுக்கல்: 2 மாகாணத் தேர்தலில் தோல்வி

தினமலர்  தினமலர்
அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு சறுக்கல்: 2 மாகாணத் தேர்தலில் தோல்வி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், பல்வேறு மாகாணங்களில் நடந்த தேர்தலில், அதிபர் டொனல்டு டிரம்பின், குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட தீவிரமாக உள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், கவர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், குடியரசு கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது.கென்டகியில், குடியரசு கட்சியின் கவர்னர் மாட் பெவின் தோல்வி அடைந்தார். அங்கு ஜனநாயகக் கட்சியின் ஆன்டி பெஷீர் வென்றார்.

விர்ஜினாவிலும் ஜனநாயகக் கட்சியே வென்றுள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.குடியரசு கட்சி மிகவும் வலுவாக உள்ள மிசிசிபியில், அக்கட்சியின் டேட் ரீவ்ஸ், கடுமையாக போராடி வென்றுள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, டிரம்ப் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக, பார்லி.,யில் விசாரணை நடந்து வருகிறது. தன் நடவடிக்கைகளால் பல்வேறு தரப்பு மக்களின் அதிருப்தியையும் டிரம்ப் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த மாகாணத் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

ஆபாச சைகை காட்டிய பெண் தேர்தலில் வெற்றி பெற்றார்


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காரில் சென்றபோது, சைக்கிளில் சென்ற, ஜூலி பிரிக்ஸ்மான் என்ற பெண், கைகளால் ஆபாசமான சைகை காட்டினார். இது தொடர்பான படம், பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த, 2017ல் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு பெண்களின் தாயான ஜூலி, அரசு ஒப்பந்தம் பெறும் நிறுவனத்தின் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, லோடோன் கவுன்டிக்கு நடந்த தேர்தலில், அவர் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு, அபார வெற்றி பெற்றார்.

மூலக்கதை