வில்லிவாக்கத்தில் செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிய வாலிபர் மரத்தில் மோதி பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வில்லிவாக்கத்தில் செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிய வாலிபர் மரத்தில் மோதி பலி

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டி சென்ற வாலிபர் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னை முகப்பேரை சேர்ந்தவர் சக்திவேல்(19). மீன்கடையில் வேலை செய்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் யோவான்(20). இவர் கூலி  வேலை செய்து வருகிறார்.

அம்பத்தூரை சேர்ந்தவர் சுரேந்தர்(20). மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.   இவர்கள் மூவரும் நேற்று நள்ளிரவு  சென்னை கொளத்தூர் பகுதியில் நண்பருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு  திரும்பிக் கொண்டிருந்தனர்.ஒரே பைக்கில்  மூவரும் வில்லிவாக்கம் தாதா குப்பம் 200 அடி சாலையில் பாடி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். சக்திவேல் செல்போன் பேசிக் கொண்டே பைக்  ஓட்டி வந்துள்ளார்.

அப்போது பைக்  நிலைதடுமாறி வழுக்கி விழுந்ததில் பைக்  பிளாட்பாரத்தின் மீது ஏறி மரத்தில் மோதியதில் சக்திவேல் தலையில்  பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்,  பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த யோவான், சுரேந்தருக்கு பலத்த காயம்  ஏற்பட்டது.

 

இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போக்குவரத்து  இன்ஸ்பெக்டர் ஹரி மற்றும் உதவி ஆய்வாளர் கலைமணி தலைமையில் வந்த போலீசார், சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பலத்த காயம் அடைந்த யோவான், சுரேந்தைர 108 ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

மூலக்கதை