நிரவ் மோடி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

தினமலர்  தினமலர்
நிரவ் மோடி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

லண்டன்: ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை, 5வது முறையாக லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார். தற்போது, அவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில், அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.


நிரவ் மோடியின் ஜாமின் மனுவை, லண்டன் நீதிமன்றம் நான்கு முறை நிராகரித்த நிலையில், ஐந்தாவது முறையாக, ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடும் மனஅழுத்தத்தில் தான் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இம்மனு மீது இன்று (நவ.,6) விசாரணை நடந்ததால், நிரவ் மோடி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இருமடங்கு ஜாமின் தொகையை அளிக்க நிரவ் மோடி முன்வந்த போதும், அவரது ஜாமின் மனுவை லண்டன் கோர்ட் நிராகரித்தது.

மூலக்கதை