போராட்டத்தில் பங்கேற்றவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்...வக்கீல்களுக்கு எதிராக 2 எப்ஐஆர் பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
போராட்டத்தில் பங்கேற்றவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்...வக்கீல்களுக்கு எதிராக 2 எப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 2 போலீசார் கொடுத்த புகாரின்படி வழக்கறிஞர்களுக்கு எதிராக 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2ம் தேதி போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 14  இருசக்கர வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதில், 21 போலீசாரும், 8 வழக்கறிஞர்களும் காயம் அடைந்தனர்.   போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து டெல்லி காவல்துறை தலைமையகத்தில் காவல்துறையினர் அவர்களது  குடும்பத்தினருடன் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

டெல்லி போலீசாருக்கு ஆதரவாக, போலீசாரின் குடும்பத்தினரும் இந்தியா கேட் பகுதியில் பேரணி நடத்தினர்.

சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக  நீடித்த இந்த போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவியது. ‘கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு 25 ஆயிரம் ரூபாய்  இழப்பீடு வழங்கப்படும்’ என்று காவல்துறை உயரதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.   இந்நிலையில், சம்பவ நாளன்று பைக்கில் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் கரண், தன்னை சில வழக்கறிஞர்கள் மடக்கி தாக்கியதாக கூறப்பட்ட  புகாரின் அடிப்படையில் நேற்று ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சிறைக் கைதிகளை ஏற்றிவரும் வாகன ஓட்டுனர் ரவி பிரகாஷ்,  தன்னை சில வழக்கறிஞர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மற்றொரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்களால் கூறப்படும் தாக்குதல் தொடர்பான மூன்று புகார்களை, காவல்துறை தரப்பில் இன்னும் எப்ஐஆர்  பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, டெல்லி காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய  காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக, டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிற்கு  உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வருண் தாக்கூர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘போலீசாரின் போராட்டம் சட்ட விரோதமானது; பொறுப்பற்றது.

ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஆபத்தானது. எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும்  பங்கேற்க போலீசுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தங்களது சொந்த கோரிக்கைகளுக்காக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கின்றனர்.

நாள்  முழுவதும் பொது இடங்களில் இதுபோன்ற சட்டவிரோத போராட்டம் நடந்தது.

அதிகாரிகளின் பொறுப்பற்ற நடத்தையால், சமூகத்தில் அச்சத்தை  ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அதனால், போராட்டத்தில் பங்கேற்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை