ஊக்க மருந்தை பயன்படுத்திய விவகாரம்: பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை...ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவுக்கு பின்னடைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊக்க மருந்தை பயன்படுத்திய விவகாரம்: பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை...ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவுக்கு பின்னடைவு

புதுடெல்லி: டெல்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவிக்குமார்  கட்லு (31), 2014ல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இவர் ஊக்கமாத்திரை பயன்படுத்துவதாக புகார் எழுந்ததால், இவர்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதில், ‘ஆஸ்ட்டரின்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கட்லுக்கு 4  ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் உத்தரவிட்டுள்ளது.



ஏற்கனவே, பூர்ணிமா பாண்டே, ஹிரேந்திர சராங், தீபிகா ஷிரிபால், கவுரவ் தோமர் ஆகியோரும் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால்  டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு ஒதுக்கப்படும் கோட்டா பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியா சார்பில் 2 வீரர், 2 வீராங்கனையை அனுப்ப முடியும். ஆனால், இந்திய  பளுதூக்குதல் சம்மேளன செயலாளர் சதேவ் யாதவ் இதனை மறுத்துள்ளார்.



இதுகுறித்து சதேவ் யாதவ் கூறுகையில், ‘‘ஊக்கமருந்து தடுப்பு விதிமுறை மீறலை பொறுத்தவரை, சர்வதேச போட்டியில் பங்கேற்கும்போது உலக  ஊக்கமருந்து தடுப்பு கழகம் நடத்தும் சோதனையில் சிக்கினால் மட்டும்தான், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது, தேசிய ஊக்கமருந்து  தடுப்பு கழகத்தின் நடவடிக்கை பொருந்தாது.

அதனால் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியாவின் கோட்டாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார்.

.

மூலக்கதை