ஆப்கான், எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து 80 கன்டெய்னர் வெங்காயம் இறக்குமதி...கிலோ ரூ.100-ஐ தொட்டதால் மத்திய அமைச்சரவை திடீர் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆப்கான், எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து 80 கன்டெய்னர் வெங்காயம் இறக்குமதி...கிலோ ரூ.100ஐ தொட்டதால் மத்திய அமைச்சரவை திடீர் முடிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஆப்கான், எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து உடனடியாக 80 கன்டெய்னர் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு ரோஸ் ரக வெங்காயத்துக்கு மட்டும் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 வரை விற்கப்படுகிறது.

பண்டிகை காலம் நெருங்குவதால் வெங்காயத்தை பதுக்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், கடந்த 28ம் தேதி நாடு முழுவதும் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிகளுக்கும் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் எனவும் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்து உலகளவில் அதிகப்படியான வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2 கோடி டன்களுக்கு மேல் வெங்காயம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

அத்துடன் சுமார் 20 லட்சம் டன்கள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜில், கிலோவுக்கு ரூ. 40 முதல் ரூ. 50 வரை உயர்ந்து கிலோ ரூ. 80 வரை விற்கப்படுகிறது.

சண்டிகரில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 50லிருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கிலோ ரூ. 80; சென்னையில் ரூ. 70; இமாச்சல் பிரதேசத்தில் ரூ. 150 வரை விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



‘கர்நாடகாவில் மட்டும் வருகிற நவ. 30ம் தேதி வரை பெங்களூரு ரோஸ் வெங்காயத்தை சில நிபந்தனைகளுடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, பெங்களூரு ரோஸ் வெங்காயத்தின் ஏற்றுமதி, இந்தாண்டு நவ. 30 வரை 9,000 டன் அளவு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பெங்களூரு ரோஸ் வெங்காயம் முக்கியமாக சிக்பல்லாபூர் மற்றும் கோலார் மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறது. சுமார் 23,000 ஹெக்டேரில் 4. 40 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை முக்கியமாக இலங்கை, மலேசியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையின் ஆலோசனை கூட்டத்தில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நுகர்வோர் விவகார அமைச்சகம் சார்பில், வெங்காய இறக்குமதியை எளிதாக்குவதற்கும், பிற நாடுகளிலிருந்து விரைவான விநியோகத்தை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

வெங்காயத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை மீண்டும் ஆய்வு செய்ததில், இறக்குமதிக்கு உடனடி அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு உடனடியாக வெங்காயம் சப்ளை செய்யுமாறு அந்நாட்டு வர்த்தக அமைச்சகங்களை கேட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

80 கன்டெய்னர் வெங்காயத்தை உடனடியாக இறக்குமதி செய்வதற்கும், 100 கன்டெய்னர் வெங்காயத்தை கடல்வழியில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திருப்பிவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெங்காய பதுக்கல் வியாபாரிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



வெங்காயம் பதுக்கல்:  தமிழகத்தை பொறுத்தவரை, ‘வெங்காயத்தை பதுக்கி வைத்தாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

வெங்காயம் பதுக்கலை கண்டறிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், விவசாயிகள் வைத்திருக்கும் சொந்த கிடங்கு, சில்லரை வியாபாரிகளின் கிடங்குகளில் வெங்காயம் பதுக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.



.

மூலக்கதை