திருப்பதி ஏழுமலையானை தினமும் விஐபி திட்டத்தில் தரிசிக்க வாய்ப்பு: தேவஸ்தானம் திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையானை தினமும் விஐபி திட்டத்தில் தரிசிக்க வாய்ப்பு: தேவஸ்தானம் திட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.

இதற்காக தேவஸ்தானம் தற்போது புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதாவது வாணி அறக்கட்டளைக்கு ஆன்லைனில் நன்கொடை வழங்கினால் இந்த ஆசை நிறைவேறும்.

இந்த திட்டத்தை கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பில் வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. புராதனமான கோயில்களை புனரமைக்கவும், பாதுகாக்கவும் தூப தீப நெய்வேத்தியம் சமர்ப்பிக்க, மதமாற்றத்தை தடுக்கவும், வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்கும், இந்துமத பிரசாரத்திற்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.ஆனால் இந்த அறக்கட்டளைக்கு பக்தர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதையடுத்து இதனை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்று நன்கொடையை ஈர்க்கும் விதமாக கடந்த மாதம் 21ம்தேதி இந்த அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக ஏழுமலையானை அருகில் சென்று தரிசிக்க (விஐபி தரிசனம்) அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

அன்று முதல் நேற்று முன்தினம் வரை இந்த அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் நன்கொடை செலுத்தி விஐபி டிக்கெட்டுக்கான தலா ரூ. 500 கட்டணமும் செலுத்தி 1109 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் பக்தர்கள் சுலபமாக இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தும் விதமாக தேவஸ்தான இணையதள முகவரி ஆன  வெப்சைட்டில் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டை பெறலாம்.

நன்கொடை வழங்கிய பக்தர்கள் 6 மாதத்திற்குள் விஐபி டிக்கெட்டுகளை பெற்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

தினமும் விஐபி திட்டத்தில் தரிசனம் செய்ய வேண்டுமானால் அறக்கட்டளைக்கு தினமும் ரூ. 10 ஆயிரம் நன்கொடை செலுத்தியும், ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக ஆன்லைனில் தினந்தோறும் 500 விஐபி டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆகம ஆலோசகராக ரமண தீட்சிதர் நியமனம்:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் ரமண தீட்சிதர். முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆட்சியின்போது 60 வயது நிரம்பிய அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு ரமண தீட்சிதர் உட்பட வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து வம்ச பாரம்பரிய அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் உயர்நீதிமன்றம் வம்ச பரம்பரை அர்ச்சகர் கட்டாய ஓய்வில் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் விருப்பம் உள்ளவரை அர்ச்சகர் பணியை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் பணியில் தொடர்வார்கள் என தற்போது உள்ள அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

இதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம ஆலோசகராக ரமண தீட்சிதர் நேற்று நியமிக்கப்பட்டார்.


.

மூலக்கதை