தெலங்கானாவில் பயங்கரம் பெண் தாசில்தார் எரித்துக்கொலை: கொலையாளிக்கு தீவிர சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலங்கானாவில் பயங்கரம் பெண் தாசில்தார் எரித்துக்கொலை: கொலையாளிக்கு தீவிர சிகிச்சை

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா(38).

இவருக்கு கணவன் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். அதே தாலுகா கவுரல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(40).

இவருக்கு 7 ஏக்கர் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்துள்ளது.   இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்படி கடந்த 2 மாதங்களாக சுரேஷ், தாசில்தார் விஜயாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ‘நில விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதால் எந்த முடிவும் எடுக்கமுடியாது’ என தாசில்தார் விஜயா கூறியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தாசில்தாரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று மதியம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த சுரேஷ், தாசில்தார் விஜயாவிடம் பேசுவதாக கூறிவிட்டு அறைக்கு சென்றார். அங்கு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த சுரேஷூக்கும், தாசில்தார் விஜயாவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் தன்னிடம் இருந்த பெட்ரோலை தாசில்தார் விஜயா மீது ஊற்றி தீவைத்து கொளுத்தினார். அவர் உடலிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் தீப்பிடித்து எரிந்த விஜயா அலறித்துடித்தபடி வெளியே ஓடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் ஓடிவந்து, விஜயாவை காப்பாற்ற முயன்றனர்.

இதில் அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் சிறிதுநேரத்தில் அலுவலக வாசலிலேயே விஜயா உடல்கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஹயத்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலத்த தீக்காயம் அடைந்த சுரேஷ், தீக்காயமடைந்த உதவியாளர் சந்திரய்யா மற்றும் டிரைவர் குருநாதரெட்டி ஆகியோரை மீட்டு ஹயத்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராட்சகொண்ட காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத் கூறியதாவது: தாசில்தார் விஜயா கொலைக்கு காரணமான சுரேஷ் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.

அவருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்.

சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை