இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்  பிரதமர் நரேந்திர மோடி

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக (அக்டோபர் 28) பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்குள்ள ரியாத் நகரில் நடைபெற்ற 'எதிர்கால முதலீடு' குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சவுதி அரேபியா நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வழியாகச் செல்வதற்கு அந்நாடு அனுமதி மறுத்ததால், பிரதமரின் பயணம் கூடுதலாக 45 நிமிடங்கள் ஆனது. வான்வெளி அனுமதி மறுத்த விவகாரம் குறித்து, சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பான ICAO-விடம் (International Civil Aviation Organization) இந்தியா புகார் அளித்துள்ளது. சவுதி அரேபியாவும் இந்தியாவும் எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்றும், இந்தப் பயணத்தின் மூலம் இரு தரப்பு உறவுகளுக்கு பலம் சேர்க்கும் என்றும் 'ட்விட்டரில்' மோடி குறிப்பிட்டுள்ளார்.

ரியாத் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு சவுதி அரேபிய மன்னர் 'சல்மான் பின் அப்துல் அசீஸ்' மற்றும் இளவரசர் 'முகமது பின் சல்மான்' இருவரும் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியாவில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ரியாத்தில் நடைபெற்ற 'எதிர்கால முதலீடு' குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர், சவுதி அரேபியாவின் 'ஆரம்கோ' நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தொழில் தொடங்குவதற்கு உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதால், சர்வதேச முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவும் சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். இந்தியா-சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அண்மையில் நடைபெற்ற 'ப்ளூம்பெர்க் சர்வதேச வர்த்தகம்' மன்றத்தில் பல நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது மிகப்பெரிய சந்தையில் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பினால் இந்தியாவிற்கு வாருங்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்குள் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி அதற்கான திட்டமிடுதலில் ஒவ்வொன்றாக மேற்கொண்டுள்ளார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

மூலக்கதை