கடலில் வீசப்பட்டது தீவிரவாத தலைவன் பாக்தாதி உடல் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவர் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடலில் வீசப்பட்டது தீவிரவாத தலைவன் பாக்தாதி உடல் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவர் நியமனம்

* சதாம் உசேனின் ராணுவத்தில் பணியாற்றியவருக்கு பதவி
*‘டவுசர்’ திருடியது முதல் ‘கெய்லா முல்லர்’ வரை பரபரப்பு
வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத தலைவன் பாக்தாதி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்டான். அவனது உடல் கடலில் தூக்கி வீசப்பட்டது.

அதையடுத்து, ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக, சதாம் உசேனின் ராணுவத்தில் பணியாற்றியவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாக்தாதியின் ‘டவுசர் திருடியது’ முதல், ‘கெய்லா முல்லர்’ ஆப்ரேஷன் வரை பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடகிழக்கு சிரியா நகரமான பாரிஷாவை சுற்றிவளைத்து, அமெரிக்க படை நடத்திய தாக்குதலின் போது பதுங்கு குழியில் இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டான். அவனுடன் மேலும் சில தீவிரவாதிகள் தற்கொலை செய்து கொண்டனர்.சிலர் அமெரிக்கப் படைகளால் சுட்டும் கொல்லப்பட்டனர்.   உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, சர்வதேச ஊடகங்களும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகின்றன. பாக்தாதியின் உடல் மீட்கப்பட்டு இந்திய நேரப்படி நேற்றிரவு கடலில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆயுத மோதலின் சட்டங்களின்படி உடல் அகற்றப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சடலம் எங்கு அல்லது எப்போது அகற்றப்பட்டது என்பது குறித்து எந்த விவரமும் கொடுக்கப்படவில்லை.

2011ம் ஆண்டில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் உடலைப் போலவே, பாக்தாதியின் உடலும் கையாளப்பட்டதாக கூறப்படுகிறது. வேறெங்கும் அடையாளம் காணக்கூடிய புதைகுழியில் புதைத்து இருந்தால், அவனை பலர் பின்தொடரும் இடமாக அது மாறிவிடும் என்பதற்காக, பாக்தாதியின் உடல் ‘கடல் அடக்கம்’ செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, பென்டகன் அதிகாரி ஜெனரல் மார்க் மில்லி கூறுகையில், ‘‘பாக்தாதியின் உடல் ஆயுத மோதலின் சட்டத்தின்படி சரியான முறையில் அகற்றப்பட்டது; பாக்தாதியின் அடக்கம் பின்லேடனின் செயல்முறையாக இருந்ததா என்று கேட்கின்றீர்  நான் அப்படிதான் எதிர்பார்க்கிறேன். பாக்தாதியின் உடலில் சில பாகங்கள் தடயவியல் டிஎன்ஏ பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமெரிக்க படைகள் பாக்தாதியின் பாதுகாவலர்களாக இருந்த இருவரை கைதிகளாக அழைத்துச் சென்றன’’ என்றார். பாக்தாதியை கொல்வதற்கான இந்த சிக்கலான அமெரிக்காவின் பணிக்கு, ரஷ்யர்கள், குர்துகள், துருக்கியர்கள் மற்றும் பஷர் அல் அசாத்தின் சிரிய துருப்புக்கள் உதவின.

கடந்த மே 15 முதல் பாக்தாதியின் இயக்கம் குறித்த தகவல்களை குர்திஷ் அதிகாரிகள் சேகரித்து அமெரிக்காவுக்கு அவ்வப்போது கொடுத்துள்ளனர். அதாவது, பாக்தாதியின் இருப்பிடம், பணியாளர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய வீட்டின் வளாக உட்புற வரைபடம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கொடுத்தன.

அமெரிக்க படைகளின் கைகளில் சிக்கி ஐஎஸ் தலைவன் பாக்தாதியின் கதை முடிந்ததை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டாடி வரும் அதேவேளையில், பாக்தாதி கொல்லப்பட்ட செய்தி உறுதிசெய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழு புதிய தலைவரை நியமித்தது.

ஜிகாதி குழுவின் புதிய தலைவராக ஈராக்கிய முன்னாள் ராணுவ அதிகாரியான அப்துல்லா கர்தாஷ் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அவர், கர்தாஷ் ஹஜ்ஜி அப்துல்லா அல்-அஃபாரி என்ற பெயரில், இனி அழைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனின் ராணுவத்தில் முக்கிய பதவியில் அப்துல்லா கர்தாஷ் இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாக்தாதியை அவர் சந்தித்துள்ளார். மேலும், பாக்தாதியின் வாரிசாகவும் அழைக்கப்பட்டார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட தகவலை,  ‘அமக்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை, ‘நியூஸ் வீக்’ உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

பாக்தாதியை ஓடவிட்ட மோப்ப நாய்
ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததற்கு முக்கிய காரணமாக பல முக்கிய தடயங்கள், தகவல்கள் இருந்தாலும் கூட, அதிமோப்ப சக்தி கொண்ட மோப்ப நாய் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதியை ஒழித்து கட்டுவதில் முக்கிய பெரிய வேலை செய்தது இந்த அற்புதமான நாய்தான்.

இதன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கருதுகிறேன். ஆனால், அதன் படத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

அந்த மோப்ப நாயை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.


‘கெய்லா முல்லர்’ ஆப்ரேஷன்
உலகின் நெம்பர் ஒன் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட பாக்தாதியை அமெரிக்க படைகள் கொல்வதற்காக பல ஆண்டாக போராடி வந்தன.

தற்போது, இறுதிகட்ட தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு ‘கெய்லா முல்லர்’ மிஷன் என்று பெயரிட்டு பாக்தாதிக்கு எதிராக தாக்குதல் நடத்தி உள்ளன. எப்படியோ அமெரிக்க படைகளின் கைகளின் சிக்காமல், பாக்தாதி தற்கொலை செய்து கொண்டான்.   ‘கெய்லா முல்லர்’ ஆப்ரேஷன் பெயர் கொண்ட இந்த பணி தொடர்பான வீடியோ காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.   ‘கெய்லா முல்லர்’ ஆப்ரேஷன் என்று பெயர் வைக்க முக்கிய காரணம், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அவர்களது உதவித் தொழிலாளி கெய்லா முல்லர் என்பதுதான்.

அவர்களின் ஆட்களின் பெயர் வைத்தே, அவர்களை கொல்லுதல் என்ற முறையில் இந்த மிஷனை அமெரிக்கா அரங்கேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 குழந்தைகள் மனித கேடயம்
அமெரிக்க படைகள், தீவிரவாதி பாக்தாதி இருப்பிடத்தை சுற்றிவளைத்த போது, ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த ஒரு சுரங்கப்பாதையை நோக்கி ஓடினான்.

அவனை அமெரிக்க படையின் மோப்ப நாய்கள் துரத்தின. நாய்களை பின்தொடர்ந்து அமெரிக்க படை வீரர்களும் வேகமாக ஓடினர்.

கடைசியாக, சுரங்கத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி, அங்குமிங்கும் ஓடினான். பின்னர், மூன்று குழந்தைகளை மனித கேடயமாக காட்டி, அமெரிக்க படைகளை அச்சுறுத்தினான்.

தொடர்ந்து, அந்த 3 குழந்தைகளுடன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டான். அந்த 3 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகின.‘டவுசர்’ திருடிய உளவாளி
குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படைகளின் மூத்த ஆலோசகரான பொலட் கேன் கூறுகையில், ‘‘ஓர் உளவாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் பாக்தாதியின் வீட்டிற்குள் ஊடுருவ முடிந்தது. நாங்கள் நியமித்த உளவாளி பாக்தாதி இருந்த இடத்துக்கு சென்று, அவன் பயன்படுத்திய உள்ளாடைகளை (டவுசர்) ரகசியமாக வெளியே கொண்டு வந்து எங்களிடம் கொடுத்தார்.

இது, பாக்தாதி இறந்தபின் டிஎன்ஏ அடையாளத்திற்கு பெரும் உதவியாக இருந்தது. கடந்த மே 15ம் தேதி முதல் பாக்தாதியின் அனைத்து நடவடிக்கைகளையும் குர்திஷ் உளவுபிரிவு உன்னிப்பாக கவனித்து வந்தது.

நாங்கள் அமெரிக்காவின் சிஐஏவுடன் இணைந்து தகவல் பரிமாற்றங்களை செய்து கொண்டோம்’’ என்றார்.


.

மூலக்கதை