பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஸ்விடோலினா, சிமோனா வெற்றி: முதல் சுற்றில் அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஸ்விடோலினா, சிமோனா வெற்றி: முதல் சுற்றில் அபாரம்

ஷென்ஜென்: உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் 49வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஷென்ஜென் நகரில் தொடங்கியது. வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்றுள்ள வீராங்கனைகள் இரண்டு பிரிவாக (ரெட், ஊதா) பிரிக்கப்பட்டுள்ளனர்.

ரெட் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), 7ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த ஆஷ்லி பார்டி அடுத்த 2 செட்களிலும் சிறப்பாக செயல்பட்டு பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கினார்.

மற்றொரு ஆட்டத்தில் நவோமி ஒசாகா (ஜப்பான்), பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) 7-6 (7-1), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

2வது நாளான நேற்று நடந்த ஊதா பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 8வது இடத்தில் இருப்பவருமான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 2வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.

இன்னொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) தோற்கடித்தார்.

.

மூலக்கதை