சிரியாவில் அமெரிக்க ராணுவம் சுற்றிவளைப்பு ஐஎஸ் தலைவன் தற்கொலை: உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்து பலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிரியாவில் அமெரிக்க ராணுவம் சுற்றிவளைப்பு ஐஎஸ் தலைவன் தற்கொலை: உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்து பலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு

வாஷிங்டன்: வடமேற்கு சிரியாவின் குறிப்பிட்ட பகுதியை அமெரிக்க ராணுவம் சுற்றிவளைத்ததால், ஐஎஸ் தீவிரவாத தலைவன் பாக்தாதி, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் ெசய்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அமெரிக்க அதிபர் உறுதிபடுத்திய நிலையில், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்திதொடர்பாளர், ‘அதிபர் டிரம்ப் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்’ என்று ஓர் அறிக்கை வெளியிட்டார். எந்தவொரு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை என்றாலும், பல ஊடக நிறுவனங்கள் அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் வடமேற்கு சிரியாவில் ஒரு தீவிரவாத தலைவருக்கு எதிராக வெற்றிகரமான தாக்குதலை நடத்தியதாக செய்தியை வெளியிட்டன.

ஆனால், நியூஸ் வீக், சிஎன்என் செய்தி நிறுவனங்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி (48) பலியானதாக செய்தி வெளியிட்டன.

அதன்தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘மிகப்பெரிய ஒரு விஷயம் நடந்துள்ளது’ என்று நேற்று காலை 6. 30 மணிக்கு ஒரு ட்விட் செய்தார். அதன்பின்பே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது தெரியவந்தது.


இதுகுறித்த அறிவிப்பில், ‘வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் அல் பாக்தாதியும் ஒருவர்.

சுரங்கப்பாதை முழுவதும் கத்திக் கொண்டே ஓடி, சிணுங்கி, அழுது கொண்டே ஐஎஸ் தலைவர் உயிரிழந்தார். தான் கட்டியிருந்த தற்கொலை படை ஆடையை வெடிக்க செய்து பாக்தாதியும், அவரது மூன்று மகன்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒரு கோழை போல அவர் இறந்தார். உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும்’ என ட்ரம்ப் தனது பதிவில்  தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றும் எண்ணத்துடன் தொடக்கத்தில் தாக்குதல்களை நடத்திய ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர், பின் நாட்களில் உலகம் முழுவதும் தாக்குதல்களை நடத்த தொடங்கினர்.

உலகின் மோசமான தீவிரவாத அமைப்பாக கருதப்பட்ட ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி, உலகின் முக்கியமான தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்து வந்த அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக சில நேரங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அவர் பேசியதாக சில ஆடியோக்களை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டு வந்தது.

இதனிடையே, அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் தங்கள் வசம் இருந்த பகுதிகளை ஐஎஸ் அமைப்பினர் இழந்தனர்.

இருப்பினும், தலைமறைவாக இருந்த அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தி வந்தனர். அந்த வகையில் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அதன்பின்னர் அல் பாக்தாதி பேசும் 18 நிமிடம் ஓடும் வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் இலங்கை தாக்குதல் குறித்து அவர் பேசியிருந்தர்.

முன்னதாக, இஸ்லாமிய அரசு என்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் உலகில் மிகவும் தேடப்படும் நபரான பாக்தாதி தலைக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 70 கோடிக்கு மேல்) பரிசுத்தொகையை அமெரிக்கா அறிவித்தது. 1971ல் ஈராக்கில் பிறந்ததாக கூறப்படும் அல் பாக்தாதி, 2013ல் தன்னை இஸ்லாமிய அரசின் கலிஃப் என்று அறிவித்தார்.பின்னர், வடக்கு ஈராக்கில் மொசூலில் உள்ள அல்-நூரி என்ற பெரிய மசூதியில் ஒரு ரமலான் பிரசங்கத்தை நிகழ்த்தினார். அதில் இஸ்லாமிய அரசு தன்னை ஒரு உலகளாவிய கலிபாவாகவும், அல் பாக்தாதி அதன் தலைவராகவும் அறிவித்தது.

2014ம் ஆண்டு வாக்கில் அல்-பாக்தாதியின் போராளிகள் குழு மேற்கு ஈராக்கின் மீது தங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியாவில் பரந்த அளவில் தீவிரவாத பிரசாரத்தை நடத்தியது.

அது தலை துண்டித்தல் போன்ற பயங்கரமான வீடியோக்களால் உலகை அச்சுறுத்தியது. உலகளவில் எல்லா இடங்களிலும் அரசாங்கங்களை நடுங்கச் செய்தது.

இந்த அமைப்பு, மன்னிப்பே இல்லாத தண்டனையை விதித்தது. இதன் சித்தாந்தங்களில் ஈர்க்கப்பட்ட சிலர் இந்தியா மற்றுமின்றி உலகெங்கிலும் உள்ள ஜிகாதிகளை ஈர்த்தது.

அல் பாக்தாதி தலைமையிலான தீவிரவாத அமைப்பில், 30,000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், ஒரு நாட்டின் ராணுவம் போல் சேர்ந்தனர்.

உலகின் பல நாடுகளில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச கூட்டணி உலகெங்கிலும் தனிமைப்படுத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான 18 நிமிட வீடியோவில், ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் நடந்த தாக்குதல்கள் சிரியாவில் அல்-பாகுஸ் பவ்கானியின் தோல்விக்கான பழிவாங்கல் என்று அல்-பாக்தாதி விவரித்தார்.

இது மார்ச் மாத இறுதியில் ஐஎஸ் அமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது. தற்ேபாது பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தாலும்கூட, ஈராக்கிலும் சிரியாவிலும் ஆயிரக்கணக்கான ஐஎஸ் போராளிகளைத் தவிர, கொரசன் மாகாணத்தையும், பிலிப்பைன்ஸில் ஒரு மாகாணத்தையும், மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு மாகாணத்தையும் ஐஎஸ் கொண்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் வலுவாக உள்ளதோடு, இன்னும் வளர்ந்து வருவதாகவும் சர்வதேச ஊடக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

.

மூலக்கதை