'லேண்டர்' எங்கே? 'நாசா' அறிவிப்பு

தினமலர்  தினமலர்
லேண்டர் எங்கே? நாசா அறிவிப்பு

வாஷிங்டன்,'நிலவை ஆராய்வதற்காக, 'சந்திரயான் - 2' விண்கலத்துடன் அனுப்பப்பட்ட, விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள, 'லேண்டர்' சாதனம் தென்படவில்லை' என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' கூறியுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆராய்வதற்காக, சந்திரயான் - 2 விண்கலத்தை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அனுப்பியது.நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக, விக்ரம் எனப் பெயரிடப்பட்ட, லேண்டர் சாதனத்தை தரையிறக்க, செப்., 7ல் முயற்சிக்கப்பட்டது. ஆனால், நிலவில் இருந்து, 2.1 கி.மீ., தொலைவில் இருந்தபோது, லேண்டர் சாதனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.


ஒரு நிலவு நாள், அதாவது, பூமியை பொருத்தவரை, 14 நாள்கள் மட்டுமே இயங்கும் வகையில், லேண்டர் சாதனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, லேண்டர் சாதனம் செயலிழந்துவிடும். இந்த நிலையில், காணாமல் போன, விக்ரம் லேண்டர் சாதனத்தை கண்டறிய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' முயற்சி மேற்கொண்டது.

நாசா அனுப்பியுள்ள நிலவைச் சுற்றி ஆய்வு செய்யும் ஆர்ப்பிட்டர் சாதனம், செப்., 17ல், விக்ரம் லேண்டர் சாதனம் விழுந்ததாகக் கருதப்படும் பகுதியின் படங்களை எடுத்து அனுப்பியது.ஆனால், அதில், விக்ரம் லேண்டர் சாதனம் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நாசாவின் ஆர்ப்பிட்டர் சாதனம், இம்மாதம், 14ம் தேதி, நிலவின் தென்பகுதி குறித்து விரிவான படங்களை அனுப்பியுள்ளது. 'அவற்றிலும், விக்ரம் லேண்டர் சாதனம் தென்படவில்லை' என, நாசா தெரிவித்துள்ளது.

மூலக்கதை