டெங்கு கொசுப்புழு வளர்த்ததற்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

தினமலர்  தினமலர்
டெங்கு கொசுப்புழு வளர்த்ததற்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

மதுரை: மதுரையில் டெங்கு கொசுப்புழு 'வளர்த்த' தனியார் நிறுவனங்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நகரில் இதுவரை 8 பேரை டெங்கு பாதித்துள்ளது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் வீடுகள், கட்டடங்களில் உற்பத்தியானால் அபராதம் விதிக்கும் நடைமுறையை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று கமிஷனர் விசாகன் தலைமையில் விளாங்குடி அபிராமிநகர், சமயநல்லுார் மெயின்ரோடு, விசாலாட்சி நகர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததை கண்டு பிடித்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

வாகன உதிரிபாகங்கள் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம், 20 கடைகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களில் ரூ.2.08 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி கமிஷனர் முருகேச பாண்டியன், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், பி.ஆர்.ஓ., சித்திரவேல் பங்கேற்றனர்.

சிறுமிக்கு டெங்கு:
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் சின்னமணி-, பாண்டிச்செல்வி தம்பதி மகள் நிரஞ்சனா 5, டெங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார பணியாளர்கள் தொட்டப்பநாயக்கனுாரில் முகாமிட்டு முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.

மூலக்கதை