உத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு

தினமலர்  தினமலர்
உத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்மாஜிமுதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு

புதுடில்லி,:உத்தரகண்டில், 2016ல் நடந்த குதிரை பேரம் தொடர்பாக, முன்னாள் முதல்வர், ஹரிஷ் ராவத் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், 2016ல், ஹரிஷ் ராவத் தலைமையிலான, காங்., ஆட்சி இருந்த போது, திடீரென, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஒன்பது பேர், போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள், அப்போதைய எதிர்க்கட்சியான, பா.ஜ.,வுடன் கைகோர்த்தனர். இதைத் தொடர்ந்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, ராவத்துக்கு கவர்னர் உத்தரவிட்டார்.


ஆட்சியை தக்கவைக்க, ஹரிஷ் ராவத், அப்போது, அமைச்சராக இருந்த, ஹரத் சிங் ராவத்துடன் சேர்ந்து, குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, 'டிவி' சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும், அதிருப்தியாளர்களுடன் ஹரிஷ் ராவத் பேசிய பேச்சுகள் அடங்கிய, 'சிடி'யும் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, இது குறித்து விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., ஹரிஷ் ராவத் பேசியதாக வெளியிடப்பட்ட, 'சிடி'யை, கைப்பற்றி, அதை குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியது.
'அது உண்மையானது தான்' என, தடயவியல் ஆய்வகம், அறிக்கை அளித்தது. இதையடுத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தொடர் விசாரணை மேற்கொள்ள, சி.பி.ஐ.,க்கு உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் சமீபத்தில் அனுமதியளித்தது.
இதையடுத்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர், ஹரிஷ் ராவத், ஹரத் சிங் ராவத் உட்பட சிலர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், ஹரத் சிங் ராவத், இப்போதுள்ள, பா.ஜ.,வின் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான அரசில், அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை