போலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்

தினமலர்  தினமலர்
போலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்

சென்னை:மணல் கொள்ளையரால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் ஜெகதீஸ்துரை மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தீயணைப்பு வீரர்கள் என 604 பேருக்கு ஜனாதிபதி முதல்வர் மற்றும் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கான பதக்கங்களை முதல்வர் பழனிசாமி அணிவித்து பாராட்டு
தெரிவித்தார்.

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் போலீசார் தீயணைப்பு துறையினர் ஊர்காவல் படையினருக்கு ஜனாதிபதி முதல்வர் மற்றும் அத்திவரதர் பாதுகாப்பு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டி.ஜி.பி. திரிபாதி வரவேற்றார். சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

இதில் டி.ஜி.பி. திரிபாதி, உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் திருநெல்வேலியில் மணல் கொள்ளையரால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் ஜெகதீஸ்துரையின் வீரதீர செயலுக்காக அவரது மனைவி மரியரோஸ் மார்க்ரெட் உள்ளிட்ட 604 பேருக்கு முதல்வர் பழனிசாமி பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

காவல் துறையில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது. அத்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது என் திடமான கருத்து. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் வைபம் நடந்தது. அத்திவரதரை ஒரு கோடி பேருக்கும் மேலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்த வைபவத்திற்கு தமிழக காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு அளித்தனர். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை போற்றும் விதமாக அத்திவரதர் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு நம் காவல் துறையினர் அளித்த பாதுகாப்பு வரலாற்று சிறப்பு மிக்கது.நம் காவல் துறையினரின் பாதுகாப்பு வியூகங்களை கேட்டு 'நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்துள்ளீர்கள்' என சீன நாட்டு காவல் துறையினர் வெகுவாக பாராட்டினார். அதேபோல சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை சீன அதிபர் ஸீ ஜின்பிங் சாலை வழியாக பயணம் மேற்கொண்டார். அவருக்கு காவல் துறையினர் சிறப்பாக பாதுகாப்பு அளித்து வெற்றி கண்டனர்.

சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததற்காக காவல் துறையினரை சீன அதிபர்
ஸீ ஜின்பிங்,பிரதமர் மோடி ஆகியோரும் பாராட்டினர். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை