'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி

தினமலர்  தினமலர்
முரசொலி இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி

சென்னை,:'தி.மு.க., கட்சி பத்திரிகையான, 'முரசொலி' அலுவலகம் அமைந்து உள்ள இடம், பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முன்வருவாரா' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னையில், முரசொலி நாளிதழ் அலுவலகம் உள்ள இடம், பஞ்சமி நிலம் என்பதற்கு, எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், விவகாரத்தை திசை திருப்ப முயன்று, 'மூலப்பத்திரத்தை வெளியிடவில்லை; பட்டாவை மட்டும் வெளியிட்டுள்ளனர்' என, ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளார். நான் விடுத்த சவாலுக்கு பதில் சொல்லாமல், வாய் மூடி மவுனமாக உள்ளார்.

இப்போது, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பா.ஜ., மாநிலச் செயலர் சீனிவாசன், 'இது குறித்து விசாரிக்க வேண்டும்' என, மனு அளித்து உள்ளதாக கூறியுள்ளார். ராமதாஸ் கூற்றை நம்பி, மண் குதிரையில் ஏறி, ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன்.

ஆதிதிராவிடர் தேசிய ஆணையத்திற்கு சென்று, நேரத்தை வீணடிப்பதை விட, காஞ்சிபுரம் மாவட்டம், பையனுாரில் பங்களா கட்ட, கையகப் படுத்தியதாக கூறப்படும், பஞ்சமி நிலத்தை மீட்கும் முயற்சியில், ராமதாசுடன் இணைந்து செயல்பட்டால், ஏதாவது பலன் கிடைக்கும்.

முரசொலி அலுவலகம் இருக்குமிடம், பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, ராமதாஸ் முன் வருவாரா; அவரது கைப்பாவையாக செயல்படும் சீனிவாசன், ராமதாசை வலியுறுத்த முன் வருவாரா? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை