விரக்தியில் மக்கள்! அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்

தினமலர்  தினமலர்
விரக்தியில் மக்கள்! அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி போன்ற விழாக்காலங்களில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதை கட்டுக்குள் கொண்டு வர லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சர்ப்ரைஸ்' ரெய்டு நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் 7 நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 10 தாலுகாக்கள், 9 பேரூராட்சி, 450 ஊராட்சிகள் அடங்கிய உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி முதல் ரோடு போடுவது, மின்கம்பம் நடுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகளில் லஞ்சம், ஊழல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் ஒரு திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் குறிப்பிட்ட தொகையை துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. தீபாவளி போன்ற விழாக்காலங்களில் அன்பளிப்பும், பண பரிசுகளும் வழங்குவது அதிகமாக உள்ளது. நட்பை மேம்படுத்தி கொள்ளவும், புதிய ஊழலுக்கு உதவிடும் வகையிலும் அரசு அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொள்ளவே இது போன்ற பண, பரிசுகள் பரிமாற்றங்கள் நடக்கிறது. அடிப்படை வசதிகள், அரசு திட்டங்களில் அதிகாரிகள் கையாடல் செய்வதை கைகாட்டி வேடிக்கை பார்த்த லஞ்ச ஒழிப்பு துறை இன்னமும் அதைதான் செய்து கொண்டிருக்கிறது.

இதனால் லஞ்ச ஒழிப்பு துறை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலிட உத்தரவால் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.29 ஆயிரம், 134 கிப்ட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ரெய்டுகள் மூலமே லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்த முடியும். இதை மாவட்டம் முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் நடத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

தகவலால் தப்பும் ஊழல்வாதிகள்:
அரசு அலுவலகங்களில் விழா காலங்களில் அன்பளிப்பு வழங்குவது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கண்காணித்தால் நிச்சயம் ஊழல்வாதிகள் அதிகமாக சிக்குவார்கள். ஆனால் வரும் முன்பே இத்துறையினரே தகவலை கசியவிடுவதால் ஊழல்வாதிகள் தப்பும் நிலை தொடர்கிறது.முதலில் இத்துறையில் உள்ள டி.எஸ்.பி., காலியிடத்தை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மகேஷ்வரன், தனியார் ஊழியர், விருதுநகர்.

மூலக்கதை