உக்கடம்-ஆத்துப்பாலம் செல்வோர் மகிழ்ச்சி மத்தாப்பூ: மாற்றுப்பாதையால் மாற்றம் வருது!

தினமலர்  தினமலர்
உக்கடம்ஆத்துப்பாலம் செல்வோர் மகிழ்ச்சி மத்தாப்பூ: மாற்றுப்பாதையால் மாற்றம் வருது!

கோவை:உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை தவிர்க்க, கழிவு நீர் பண்ணை வழியாக செல்வதற்கு, 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள, மாநகராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியில், தற்போது, 'டெக்' அமைக்கப்படுகிறது.
வழித்தடம் மிகவும் குறுகலாக இருப்பதால், இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.பொள்ளாச்சி ரோடு செல்ல வேண்டிய வாகனங்கள், நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனுார், சாரதா மில் ரோடு வழியாக பயணிக்கின்றன.பாலம் வேலை நடக்கும் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக மோசமாகியுள்ளது. மழை நீரும், கான்கிரீட் கலவை ஊற்றும்போது, சொட்டு சொட்டாக வழியும் தண்ணீரும் தேங்கி, அப்பகுதியே சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது.
வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கழிவு நீர் பண்ணை வழியாக ஆத்துப்பாலம் வரும் வகையிலான ரோட்டில், வாகனங்களை திருப்பி விட வேண்டும் எனும் கோரிக்கை குறித்து, கடந்த, 18ம் தேதி நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. மாற்றுப்பாதை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகத்துக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு உள்ளிட்டோர், அப்பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.'பேட்ச் ஒர்க்' பணிகளை உடனடியாக மேற்கொள்ள, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சுங்கத்தில் இருந்து வருவோர், கழிவு நீர் பண்ணை வழியாக, ஆத்துப்பாலம் செல்லலாம். டவுன்ஹால் வழியாக வருவோர் நேராக செல்லும் வகையில், இரு பாதையும் பயன்பாட்டில் இருக்கும். கழிவு நீர் பண்ணை வழியாக உள்ள ரோட்டை செப்பனிட, மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என்றனர்.கூடவே, புதிய மேம்பாலத்தின் கீழ் பகுதி சாலையையும், தற்காலிகமாக செப்பனிட்டால், தினமும் குடும்பத்துடன் விழுந்து, எழுந்து செல்வோர் பயனடைவர்.

மூலக்கதை