சலுகை தொகை கிடைக்காததால் நிதிச்சுமை: பின்னலாடை துறையினர் ஏமாற்றம்

தினமலர்  தினமலர்
சலுகை தொகை கிடைக்காததால் நிதிச்சுமை: பின்னலாடை துறையினர் ஏமாற்றம்

திருப்பூர்: நிலுவையில் உள்ள சலுகை தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தினர், அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உட்பட உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ளனர்.
ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு, ஆர்.ஓ.எஸ்.எல்., -எம்.இ.ஐ.எஸ்.,ஜி.எஸ்.டி., ரீபண்ட் போன்ற சலுகைகளை வழங்குகிறது. உலக சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள, இச்சலுகைகளை, ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.கடந்த, 2018 டிச., முதல், ஆர்.ஓ.எஸ்.எல்., சலுகையும், இரு மாதங்களாக, எம்.இ.ஐ.எஸ்., சலுகை தொகை பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படாமல் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு, போனஸ் பட்டுவாடா துவங்கியுள்ள நிலையில், நிறுவனங்களுக்கான நிதி தேவை தற்காலிகமாக அதிகரித்துள்ளது.
ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது;ஆர்.ஓ.எஸ்.டி.சி.எல்., அறிவிக்கப்பட்ட சலுகை தொகை, ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படவில்லை; பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, மார்ச் மாதத்துக்கு முன்பிருந்தே, சலுகை தொகை விடுவிக்கப்படவில்லை.
அதேபோல், எம்.இ. ஐ.எஸ்., சலுகையிலும் நிலுவை உள்ளது. போனஸ் பட்டுவாடா, ஜாப் ஒர்க் நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டியிருப்பதால், ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி தேவை, பலமடங்கு அதிகரித்துள்ளது.இதனால், மத்திய அரசு, உடனடியாக நிலுவை தொகையை விடுவிக்கும் என எதிர்பார்த்தோம்; ஆனால், தொகை விடுவிக்கப்படவில்லை; இது, கவலையளிக்கிறது.கடன் வழங்க, வங்கிகளும் தயங்குகின்றன.
பெரும்பாலான நிறுவனங்கள், அதிக வட்டிக்கு, தனியாரிடம் கடன் பெற்று, போனஸ் பட்டுவாடா செய்கின்றனர். சலுகை தொகையை விரைந்து விடுவித்து, ஏற்றுமதியாளர்கள், கடன்களை திருப்பிச் செலுத்த உதவ வேண்டும்; நிறுவனங்கள், நிதிச்சுமையில் சிக்கிக்கொள்ளாதவாறு பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை