கன்டெய்னரில் 39 சடலங்கள்

தினமலர்  தினமலர்
கன்டெய்னரில் 39 சடலங்கள்

லண்டன்: பிரிட்டனின், கிரேஸ் நகரில் கண்டெய்னர் லாரியில் இருந்த 39 சடலங்கள் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

பிரிட்டன் நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில், லண்டனின் 35 கி.மீ., தொலைவில் உள்ள கிரேஸ் பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுவன ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் எசக்ஸ் போலீசார் வந்து கன்டெய்னர் லாரியை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில், அடையாளம் தெரியாத 39 பேரின் சடலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, வடக்கு அயர்லாந்து பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவர் தான் கன்டெய்னர் டிரைவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அதிகளவிலான மக்கள் உயிரிழந்த இந்த சம்பவம், துயரமானது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த கண்டெய்னர், பல்கேரியாவில் இருந்து பிரிட்டனுக்குள் கடந்த 19ம் தேதி வந்திருக்கலாம் என நம்புகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இந்த துயர சம்பவம் பெரும் வருத்தத்தை தருகிறது. சம்பவம் குறித்து தொடர்ச்சியாக தகவல்களை பெற்று வருகிறேன். போலீசாருடன் தொடர்பில் உள்ளேன். என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை