'வாய்க்கொழுப்பு' காரப்பன் மீது வழக்கு; கைது எப்போது?

தினமலர்  தினமலர்
வாய்க்கொழுப்பு காரப்பன் மீது வழக்கு; கைது எப்போது?

கோவை: கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை இழிவாக பேசி, ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய, சிறுமுகை துணிக்கடைக்காரர் காரப்பன் மீது, கோவை மாநகரபோலீசார் நேற்றிரவு(அக்.,22) வழக்குப்பதிவு செய்தனர். காரப்பன் மீது கைது நடவடிக்கை விரைவில் பாயும் என, போலீசார் தெரிவித்தனர்.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையிலுள்ள, 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர் காரப்பன். இவர், கோவையில் நடந்த கருத்தரங்கில், அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் பற்றி இழிவாக பேசினார். இவரை கைது செய்யக்கோரி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்து முன்னணி சார்பில் சிறுமுகை போலீசில்புகார் செய்யப்பட்டும், காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. 'காரப்பன், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்தரங்கு நடந்த இடம், கோவை நகரிலுள்ள பீளமேடு பகுதி; எனவே, கோவை மாநகர போலீஸ்தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என, கோவை ரூரல் போலீசார், பொறுப்பை தட்டிக்கழித்தனர்.

குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பின், சம்பவ இடத்தை காரணம் கூறி போலீசார் தட்டிக்கழிக்காமல் வழக்குப்பதிவு செய்து, அதன்பின் வழக்கின் விசாரணையை, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாம் என, டி.ஜி.பி., அலுவலகம் பல முறை சுற்றறிக்கை, அறிவுறுத்தல்களை ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும், 'சம்பவம் நடந்த காவல் எல்லை'யை காரணம் கூறி, கோவை ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருவது, பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், சமூக நல்லிணக்கத்துக்கு சவால் விடும் வகையிலும், மத வன்முறையை துாண்டும் வகையிலும் பேசிய காரப்பனை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜ., நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் நேற்றுமுன்தினம் நேரில் புகார் அளித்தனர். இதையடுத்து, இவ்விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, காரப்பன் மீது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வை துாண்டுதல், இழிவாக பேசுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக, இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) (பி), மற்றும் 295 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ், பீளமேடு போலீசார் நேற்றிரவு வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காரப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை சட்டப்படி மேற்கொள்ளப்படும்' என்றார். காரப்பன் தற்போது தலைமறைவாக உள்ளார்.

மூலக்கதை