விதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து: எம்.பி., மனைவிக்கு கண்டனம்

தினமலர்  தினமலர்
விதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து: எம்.பி., மனைவிக்கு கண்டனம்

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ், எம்.பி.,யின் மனைவி, விதியை பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி, 'பேஸ்புக்'கில் எழுதிய பதிவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, எர்ணாகுளம் லோக்சபா தொகுதியை சேர்ந்த காங்., - எம்.பி., ஹிபி ஈடன். இவரது மனைவி, அனா லிண்டா ஈடன்.


கேரளாவில், சமீபத்தில் பெய்த கனமழையில், எம்.பி., ஹிபியின் வீடு, மழை நீரில் மூழ்கியது.இந்நிலையில், அவரது மனைவி லிண்டா, சமூகவலைதளமான 'பேஸ்புக்'கில், பதிவு ஒன்றை, நேற்று முன்தினம் வெளியிட்டார்.அதில், 'விதி என்பது, பாலியல் பலாத்காரத்தை போன்றது. உங்களால் அதை எதிர்த்து போராட முடியவில்லை எனில், அதை அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்' என குறிப்பிட்டார். அந்த பதிவின் கீழ், அவரது குழந்தை, மழை நீரில் இருந்து காப்பாற்றப்படும் காணொளியும், அவரது கணவரும், எம்.பி.,யுமான ஹிபி ஈடன், உணவை ரசித்து உண்ணும் காணொளியையும் பதிவிட்டு இருந்தார்.இந்த பதிவு, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லிண்டாவின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, நேற்று அந்த பதிவை நீக்கிய லிண்டா, 'தன் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெண்களை இழிவுபடுத்துவது தன் நோக்கம் அல்ல' எனவும் தெரிவித்து, தன்செயலுக்கு மன்னிப்பு கோரினார்.

மூலக்கதை