பாம்பு, முதலையை காட்டி மிரட்டியதை தொடர்ந்து மோடிக்கு பாக். பாப் பாடகி மனித வெடிகுண்டு மிரட்டல்: சமூகவலைதளத்தில் புகைப்படம் வைரல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாம்பு, முதலையை காட்டி மிரட்டியதை தொடர்ந்து மோடிக்கு பாக். பாப் பாடகி மனித வெடிகுண்டு மிரட்டல்: சமூகவலைதளத்தில் புகைப்படம் வைரல்

இஸ்லாமாபாத்: பிரதமர் மோடிக்கு எதிராக பாம்புகளையும், முதலைகளையும் காட்டி மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி, தற்போது தான் மனித வெடிகுண்டாக மாறுவதாக கூறி, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது, சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான ரபி பிர்சாடா, ஜோர் சர்ராபா உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். பெரும் ரசிகர் கூட்டங்களை கொண்ட ரபி பிர்சாடா, கடந்த செப்.

5ம் தேதி, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். ‘மோடிக்கு எதிராக ஒரு காஷ்மீர் பெண்ணைத் தயார்படுத்த வேண்டும்; மோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும்’ என்ற தலைப்பு அந்த பதிவுக்கு வைக்கப்பட்டிருந்தது.

அந்த 50 வினாடி வீடியோவில் ‘பாம்புகளை கைகளில் வைத்து கொள்ள வேண்டும்; முதலைகளை முன்னால் வைத்துக் கொள்ள வேண்டும்; நான் காஷ்மீர் பெண், இந்த பரிசுகளான பாம்புகளும் முதலைகளும் மோடிக்காக தான்.

காஷ்மீர் மக்களை மிகவும் துன்புறுத்துகிறீர்கள். இதற்காக இவற்றை தயாராக வைத்துள்ளேன்.

என் நண்பர்களாகிய இந்த பாம்புகளும் முதலைகளும் உங்களுக்கு விருந்து வைப்பார்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
பின்பு ஒரு பாடலும் பாடினார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாம்புகளையும், முதலைகளையும் வீட்டில் வைத்திருந்ததாக கூறி, ரபி பிர்சாடாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி வனத்துறை, அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் நடவடிக்கையை கண்டித்து வீடியோ வெளியிட்டதாக ரபி பிர்சாடா, ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு ரபி பிர்சாடா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நான் கட்டிப்பிடிக்க விரும்புகிறேன்’ என்ற வாசகத்துடன் ‘#மோடிஹிட்லர்’ மற்றும் ‘#காஷ்மீர்ஹிபேடி’ என்ற ஹேஷ்டேக்குகளுக்கு ‘டேக்’ செய்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் அவரது உடல் முழுக்க தற்கொலை படையை ேசர்ந்தவர்கள் மனித வெடிகுண்டுகளை உடலில் கட்டி வைத்திருப்பது போன்று, உடல் முழுக்க வெடிகுண்டுகளை கட்டியுள்ளார்.

இதனால், பிரதமர் மோடிக்கு எதிராக, அவரை கட்டிப்பிடிக்கும் நோக்கில் மனித வெடிகுண்டாக தான் மாற விரும்புவதாக தெரிவித்ததாக தெரிகிறது. இவரது புகைப்பட பதிவை, பாகிஸ்தானை சேர்ந்த ட்விட்டர்வாசிகள் ரீட்விட் செய்தும், கருத்து மற்றும் விருப்பங்களை தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த புகைப்படம் இன்று பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியர்கள் தரப்பிலும், ரபி பிர்சாடாவுக்கு எதிராக அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டன கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் பெண்களின் புகைப்படத்துடன், ரபி பிர்சாடாவின் புகைப்படத்தை இணைத்து, பாகிஸ்தானின் கலாசாரத்தை பாருங்கள்? என்றும் பதிவிட்டுள்ளனர்.

.

மூலக்கதை