பாலில் ஒரு பூகம்பம்! புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்

தினமலர்  தினமலர்
பாலில் ஒரு பூகம்பம்! புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை பூச்சிக்கொல்லி தீவனத்தால் சிக்கல்

மதுரை,: தாய்ப்பால் இன்றி கூட குழந்தைகள் வளர்ந்திருக்கலாம். ஆனால் பசும்பாலை ருசிக்காமல் எவரும் குழந்தை பருவத்தை கடந்திருக்க முடியாது. பிறப்பு தொட்டு இறப்பு வரை பாலும், பால் பொருட்களும் நம் முக்கிய உணவுகளாக தொடர்கின்றன. அமுதாய் கிடைத்த இப்பால் சில நேரங்களில் ஆபத்தை தரும் என்றால், அது எத்தனை அதிர்ச்சி. அப்படியொரு பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது அக்.18 ல் வெளியான மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை.

1,103 நகரங்களில் ஆய்வு



2018 மே முதல் டிசம்பர் வரை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 1,103 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை வளர்ப்போர், பால்காரர், விற்பனையாளர், நிறுவனங்களின் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் 6,432 மாதிரிகள் எடுக்கப்பட்டன.பகுப்பாய்வு கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தி, பாலின் தரத்தை அறிய அதில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட 13 வகை பொருட்களின் அளவு கணக்கிடப்பட்டது. அதில் அனுமதிக்கக்கூடியஅளவை விட சில பொருட்கள்அளவில் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3, 329 மாதிரிகளில் இது கண்டறியப்பட்டது; அதாவது 59 சதவீத மாதிரிகளில். எஞ்சிய 41 சதவீத மாதிரிகள் மட்டுமே பிரச்னை இல்லாதவை. நல்ல விஷயம் என்னவென்றால், அனுமதிக்கக் கூடிய அளவை விட சில பொருட்களின் அளவு அதிகமாக இருந்தாலும் கூட, மொத்த மாதிரிகளில் 93 சதவீத பால் நுகர்வுக்கு ஏற்றவை.இவற்றால் உடலுக்கு தீங்கு இல்லை.

புற்றுநோய் பாதிப்பு



அதே வேளையில் எஞ்சிய 7 சதவீத மாதிரிகளில் 'அப்லாடாக்ஸின் எம்1', ஆண்டிபயாடிக்ஸ், பூச்சிக்கொல்லி அளவு அனுமதிக்கக்கூடியதை விட அதிகமானதை வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இவற்றால் மரணம் கூட நேரிடலாம். குறிப்பாக அப்லாடாக்ஸின் அளவு அதிகமாக இருப்பது புற்றுநோயை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 114 நகரங்களில் 551 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதில் மதுரை மாவட்டத்தில் 25, திண்டுக்கல்லில் 10, தேனியில் 12, விருதுநகரில் 25, ராமநாதபுரத்தில் 8, சிவகங்கையில் 9மாதிரிகள். 285 மாதிரிகளில் பிரச்னை இல்லை. எஞ்சிய 266 மாதிரிகளில் பல்வேறு பொருட்கள் அனுமதிக்கக்கூடிய அளவை விட அதிகம் இருந்தன.புற்றுநோயை தரும் 'அப்லாடாக்ஸின் எம்1' அளவு 88 மாதிரிகளிலும், ஆண்டிபயாடிக்ஸ் அளவு 3 மாதிரிகளிலும் அதிகம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை



இதற்கு முன் 2011, 2016ம் ஆண்டுகளில் இதுபோன்ற ஆய்வை மத்திய அரசு நடத்தியது. ஆனால் அவற்றில் 'அப்லாடாக்ஸின் எம்1' அளவு அனுமதிக்கக்கூடிய அளவை தாண்டவில்லை. முதன் முறையாக தற்போதைய ஆய்வில் இதன் அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது அரசுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. இப்பாதிப்பிற்கான காரணத்தை கண்டறிந்து களையும் முயற்சியில் உணவு பாதுகாப்புத்துறை களம் இறங்கியுள்ளது.

காரணம் என்ன



பழைய காலங்களில் இயற்கை முறையில் விவசாயம் நடந்தது. அறுவடைக்குப் பின் மிஞ்சும் வைக்கோல், விளைநிலங்களில் உள்ள புற்கள் மாடுகளுக்கு உணவாகின. ஆனால் இன்றைக்கு செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி விவசாயம் இல்லை. இம்முறையில் விளைவிக்கப்படும் பொருட்கள் மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்துவதை போன்று வைக்கோல், புற்களை உண்ணும் மாடுகளையும் பாதிக்கிறது.

பூச்சிக்கொல்லி கலந்தஉணவுகள் பாலிலும் கலக்கின்றன. நகர் பகுதி மாடுகள் பாலிதீன், பிளாஸ்டிக் என கண்டதை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இத்தகைய காரணங்களே பாலில் அப்லாடாக்ஸின்,ஆண்டிபயாடிக்ஸ், பூச்சிகொல்லி போன்றவற்றின் அளவு மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு அதிகரிக்க காரணம். இதை தொடர்ந்து அருந்தினால் உடல்நல குறைவு ஏற்படும்.'இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி, நாம் இயற்கை விவசாயத்திற்கு திரும்புவது தான்' என்கின்றனர் கால்நடைத்துறை அதிகாரிகள்.

மீண்டும் மாதிரி சேகரிப்பு



மத்திய அரசின் ஆய்வறிக்கை சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்போது மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 18 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, முந்தைய ஆய்வு முடிவுடன் ஒப்பிடப்படும். அப்லாடாக்ஸின் மட்டுமின்றிஇன்னும் பல பொருட்களின் அளவு பாலில் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எம். சோமசுந்தரம்உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், மதுரை

மனிதனுக்கு பாதிப்பு என்ன



அப்லாடாக்ஸின் என்பது பூஞ்சைகளை குறிக்கும். மாடுகள் உண்ணும் தீவனத்தில் பூஞ்சைகள் இருந்தால் அவை கல்லீரலில் 'அப்லாடாக்ஸின் பி1' ஆக சேரும். பின் அங்கிருந்து சுரக்கும் பாலில் கலக்கும். அப்போது 'அப்லாடாக்ஸின் எம்1' ஆக மாறும். பாலில் இது இருப்பதால் ஆபத்தில்லை. குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும் போது அருந்துவோரின் உடலை பாதிக்கும். அடிக்கடி அருந்தினால் புற்றுநோய் ஏற்படும். விளை பொருட்களில் அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. இவை கலந்த தீவனங்களை மாடுகள் உண்ணும்போது பாலில் கலந்துவிடும். இதுவும் புற்றுபோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
டாக்டர் ஆர். பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனை.


அதிர்ச்சி பட்டியலில் தமிழகம்



பாலில் அப்லாடாக்ஸின் அளவு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளா, டில்லி, தமிழகம் முதல் இடத்தில் இருப்பது கூடுதல் அதிர்ச்சி. இதில் இருந்து மீண்டுவர மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்களை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய கால்நடை வளர்ப்போர் முன்வர வேண்டும்.

மூலக்கதை