ரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019

 ராஞ்சி: டெஸ்ட் அணியில் துவக்க வீரராக வாய்ப்பு பெற்ற ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்று எழுச்சி பெற்றுள்ளார்.

இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா. மூன்று முறை இரட்டை சதம் அடித்தவர். ‘டுவென்டி–20’ யிலும் மிரட்டுவார். டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் பெற முடியாமல் தவித்தார். 

இந்நிலையில் தென் ஆப்ரிக்க தொடரில் ரோகித்தை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன. இதற்கு முன் டெஸ்டில் ‘மிடில் ஆர்டரில்’ பேட்டிங் செய்த ரோகித், முதன் முறையாக விசாகப்பட்டனம் டெஸ்டில் துவக்க வீரர் வாய்ப்பு பெற்றார்.

இதன் முதல் இன்னிங்சில் 176 ரன்கள் விளாசிய இவர், இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்கள் எடுத்தார். புனேயில் (14) சற்று ஏமாற்றிய போதும், ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இரட்டைசதம் (212) அடித்து மிரட்டினார்.

களமிறங்கிய 4 இன்னிங்சில் 2 சதம், 1 இரட்டை சதம் உட்பட 529 ரன்கள் (சராசரி 132.25 ரன்) குவித்தார். இதில் 62 பவுண்டரி, 19 சிக்சர் விளாசினார். விசாகப்பட்டனம், ராஞ்சியில் ஆட்ட நாயகன் ஆன இவர், கடைசியில் தொடர் நாயகனாக எழுச்சி பெற்று, டெஸ்டில் தனது இடத்தை உறுதி செய்தார்.

* 71.7

இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்டில் குறைந்தது 1000 ரன்னுக்கும் மேல் எடுத்ததில், அதிக சராசரி கொண்ட இந்திய வீரர்களில் ரோகித் சர்மா (71.7) முதலிடம் பெற்றார். சித்து (69.4), டிராவிட் (65.8), சச்சின் (62.4), கோஹ்லி (60.9) அடுத்தடுத்து உள்ளனர்.

* பிராட்மேனை முந்தினார்

சொந்தமண்ணில் குறைந்தது 10 டெஸ்டில் பங்கேற்றதில் அதிக ரன் சராசரி கொண்ட வீரர்களில் ரோகித் சர்மா (99.8), ஆஸ்திரேலியாவின் பிராட்மேனை (99.2) முந்தினார். ஆடம் வோஜஸ் (86.3, ஆஸி.,) அடுத்த இடத்தில் உள்ளார். 

மூலக்கதை