வரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019

தினமலர்  தினமலர்
வரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019

ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற முதல் இந்திய கேப்டன் என கோஹ்லி வரலாறு படைத்தார். 

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடந்தது. 

முதல் இன்னிங்சில் இந்தியா 497/9 (‘டிக்ளேர்’), தென் ஆப்ரிக்கா 162 ரன்கள் எடுத்தன. ‘பாலோ ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணி, மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ், 203 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியிருந்தது. டி புருய்ன் (30), நார்ட்ஜே 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். 

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. புருய்ன் (30), லுங்கிடி (0), நதீம் சுழலில் சிக்கினர். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 133 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் வென்று கோப்பை கைப்பற்றியது. 

இதையடுத்து தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் முழுமையாக (‘ஒயிட்வாஷ்’) வென்ற முதல் இந்திய கேப்டன் ஆனார் கோஹ்லி.

* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அதிக முறை (2) டெஸ்ட் தொடர் வென்ற கேப்டன் ஆனார் கோஹ்லி. இதற்கு முன் கங்குலி, சச்சின் தலா ஒரு முறை தொடரை வென்றனர். 

* டெஸ்டில் அதிகமுறை இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய கேப்டன்களில் கோஹ்லி (9), தோனியுடன் (9) இணைந்தார். அசார் (8), கங்குலி (7) அடுத்து உள்ளனர். 

* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக மோதிய 10 டெஸ்டில், கோஹ்லி அணி 7ல் வென்றது (70.00 சதவீதம். இந்திய அணியின் மற்ற கேப்டன்கள் மொத்தம் பங்கேற்ற 29 டெஸ்டில், 7ல் தான் இந்தியா வென்றது (24.14).

 

டெஸ்ட் அரங்கில் சொந்தமண்ணில் தொடர்ந்து 11 தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 

* கேப்டன் கோஹ்லி தலைமையில் இந்தியா சொந்தமண்ணில் பங்கேற்ற 24 டெஸ்டில், 18ல் வென்றது. 1ல் தோற்க, 5 ‘டிரா’ ஆனது.

 

240

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முதலில் விண்டீசை (2–0) வீழ்த்தி 120 புள்ளிகள் பெற்றது. தற்போது தென் ஆப்ரிக்காவை முழுமையாக வெல்ல (3–0) கூடுதலாக 120 புள்ளிகள் கிடைத்தன. மொத்தமாக 240 புள்ளிகளுடன், பட்டியலில் ‘நம்பர்–1’ அணியாக நீடிக்கிறது. நியூசிலாந்து (60), இலங்கை (60) அடுத்த இரு இடத்தில் உள்ளன. 

மூலக்கதை