வங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019

தினமலர்  தினமலர்
வங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019

தாகா: வங்கதேச வீரர்களின் ‘ஸ்டிரைக்’ விவகாரத்தின் பின்னணியில், யாரோ சதி செய்கின்றனர் என, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம், இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி நவ. 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. அடுத்த இரு போட்டிகள் முறையே ராஜ்கோட் (நவ.7), நாக்பூரில் (நவ.10) நடக்கும். இதற்கிடையே, பி.பி.எல்., தொடரை மீண்டும் தனியார் உரிமையாளர்களை கொண்டு நடத்துவது, வீரர்களுக்காக சம்பள ஒப்பந்த பணத்தை அதிகரிப்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற, வங்கதேச வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதை வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி..) நிறைவேற்றும் வரை, கிரிக்கெட் தொடர்பான எவ்வித நிகழ்வுகளிலும் பங்கேற்கப் போவதில்லை என வீரர்கள் அறிவித்துள்ளனர். இது, இந்திய தொடர் நடப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

இது குறித்து பி.சி.பி., தலைவர் நஜ்முல் ஹசன் கூறுகையில்,‘‘ வீரர்களின் ‘ஸ்டிரைக்’ விவகாரத்தில் சதி இருப்பதாக உணர்கிறோம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவோம்,’’ என்றார்.

பி.சி.பி., இயக்குனர் முகமது யூனஸ் கூறுகையில்,‘‘ வீரர்கள் ஏதாவது பிரச்னை என்றால், எங்களிடம் பேசி இருக்க வேண்டும். இதற்குப்பதிலாக, ‘மீடியாவை’ அழைத்து கோபத்துடன் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இவர்களின் செயல்பாடு, எங்களை மிரட்டுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை,’’ என்றார்.

 

மூலக்கதை