மஹா.,ஹரியானாவில் பரபரப்பான ஓட்டுப் பதிவு விறுவிறுப்பு: தேர்தல் முடிவுகள் 24ல் வெளியாகிறது

தினமலர்  தினமலர்
மஹா.,ஹரியானாவில் பரபரப்பான ஓட்டுப் பதிவு விறுவிறுப்பு: தேர்தல் முடிவுகள் 24ல் வெளியாகிறது

மும்பை,: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில், 63 சதவீதமும், ஹரியானாவில், 65 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.

தேர்தல் முடிவுகள், வரும், 24ல் வெளியாக உள்ளன.மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


நடவடிக்கைஇந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ., அரசு அமைந்துள்ளதால், அந்த அரசு தொடருமா என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டது.லோக்சபா தேர்தல் வெற்றியால், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பா.ஜ., அரசுகள் மிகவும் தெம்புடனும், நம்பிக்கையுடன் இருந்தன. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, தேர்தலுக்கான நடவடிக்கைகளை, பா.ஜ., துவக்கிவிட்டது.அதே நேரத்தில், லோக்சபா தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. மேலும், லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வியில் இருந்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்னும் மீளவில்லை.இது, இந்த சட்டசபை தேர்தலில் வெளிப்படையாக தெரிந்தது. அதனால், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் மிகவும் மந்தமாகவே இருந்தது.இந்நிலையில், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைகளுக்கான ஓட்டுப் பதிவு, பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது.
இதைத் தவிர, தமிழகத்தின், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகள் உட்பட, 18 மாநிலங்களில் காலியாக உள்ள, 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.உத்தர பிரதேசத்தில், 11; குஜராத்தில்,
ஆறு; கேரளா மற்றும் பீஹாரில், தலா, ஐந்து; பஞ்சாப் மற்றும் அசாமில், தலா, நான்கு; சிக்கிமில், மூன்று; தமிழகம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா, இரண்டு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.

இடைத்தேர்தல்அருணாச்சல பிரதேசம், ம.பி., ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் தலா, ஒரு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள சதாரா லோக்சபா தொகுதி மற்றும் பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் முடிவு கள், 24ல் வெளியாக உள்ளன. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிராவில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 63 சதவீத ஓட்டுகள் பதிவாயின. கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், 63.38 சதவீத ஓட்டுகள் பதிவாகின.முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்தத் தேர்தலில், 76.54 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டளித்த பிரபலங்கள்மஹாராஷ்டிரா: தலைநகர் மும்பையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தாருடன் வந்து ஓட்டளித்தார். பாலிவுட்டைச் சேர்ந்த, அமீர் கான், மாதுரி தீட்சித், லாரா தத்தா, ரித்தேஷ் தேஷ்முக், அவருடைய மனைவி ஜெனிலியா ஆகியோர் ஓட்டளித்தனர்.மும்பையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானியுடன், ஒரு முதியவர் வந்தார். ''நம் ராணுவத்தில் பணியாற்றிய, 93 வயதாகும் கன்னா தான், இன்றைய ஹீரோ. ஓட்டளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அனை
வரிடமும் ஏற்படுத்தியுள்ளார்,''என, அவர் குறித்து, ஸ்மிருதி இரானி கூறினார்.ஹரியானா: ஹரியானாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டார், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் சவுதா ஆகியோர் ஓட்டளித்தனர்.
சைக்கிளில் வந்து கட்டார் ஓட்டளித்தார். அதே நேரத்தில் துஷ்யந்த் சவுதாலா, தன் குடும்பத்தாருடன், டிராக்டரில் வந்து ஓட்டுஅளித்தார்.

தேர்தல் துளிகள்

● மஹாராஷ்டிர மாநிலம் மேற்கு நாக்பூர் தொகுதியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன் குடும்பத்தினருடன் ஓட்டளித்தார்
● மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், 'பார்கோட்' மூலம், வாக்காளர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டன. நாட்டிலேயே முதல் முறையாக இந்த புதிய முறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது● ஹரியானாவின் அசாந்த் தொகுதியின், பா.ஜ., வேட்பாளர் பாக் ஷிக் சிங் விர்க், பிரசாரத்தின்போது, 'யார் யார் எந்தக் கட்சிக்கு ஓட்டளித்தனர் என்ற விபரங்கள் எங்களுக்கு கிடைத்துவிடும்' என, பேசியுள்ளார். 'பா.ஜ.,வில் உள்ள மிகவும் நேர்மையான மனிதர் இவர்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல், கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்
● பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். ''நான் சண்டிகரில் இருந்து ரயில் மூலம் வந்து, பின்னர் ரிக் ஷாவில் பயணம் செய்தேன். ஓட்டுச் சாவடிக்கு சைக்கிளில் வந்துள்ளேன். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும். அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் வந்தேன்,'' என, கட்டார் கூறினார்
● மஹாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மோர்ஷி தொகுதியில் போட்டியிடும், சுவாபிமானி பக் ஷா என்ற கட்சியின் வேட்பாளர் தேவேந்திர புயார், காரில் சென்றபோது, 'பைக்'கில் வந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால் அவர் மீது ஒரு குண்டு கூட படவில்லை. அதையடுத்து, காரை வழிமறித்து, அவரை கீழே இறக்கி, மூவரும் சரமாரியாக தாக்கி உள்ளனர்; மேலும், காருக்கும் தீவைத்தனர்
● ஓட்டளிக்க பெண்களிடம் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில், மஹாராஷ்டிர மாநிலத்தின் பல இடங்களில், 'கிரீச்' எனப்படும் குழந்தைகள் பராமரிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.

மூலக்கதை