நோட்டீஸ்! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து முடிக்க ... ஒப்பந்த நிறுவனங்களுக்கு மாநகராட்சி 'செக்'

தினமலர்  தினமலர்
நோட்டீஸ்! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து முடிக்க ... ஒப்பந்த நிறுவனங்களுக்கு மாநகராட்சி செக்

மதுரை : மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மெதுவாக மேற்கொள்ளும் இரு ஒப்பந்த நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 650 கோடி ரூபாய் அளவில் மேம்பாட்டு பணி நடக்கிறது. இவற்றில் ரூ.159.7 கோடியில் பெரியார் பஸ் ஸ்டாண்டை தரம் உயர்த்தும் பணி, ரூ.81.41 கோடியில் வைகையில் தடுப்பணை மற்றும் ராஜா மில் சாலை முதல் குருவிகாரன் சாலை வரை ஆற்றின் இருகரையில் தடுப்புச்சுவர், நடைபாதை, பூங்கா அமைக்கும் பணிகள் முக்கியமானவை.பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்காக ஏற்கனவே இருந்த பெரியார், காம்பளக்ஸ் பஸ் ஸ்டாண்டுகள் இடிக்கப்பட்டன. தரை கீழ் இருதளம், தரைதளம், மூன்று மேல்தளம் என ஏழு தளங்கள் கட்ட ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது.

பல மாதங்கள் ஆகியும் பணிகள் துவக்க நிலையிலேயே உள்ளன. தடுப்பணை பணிகள் முடியும் தருவாயில் இருந்தாலும், ஆற்றின் கரையில் சுற்றுச்சுவர், ரோடு, பூங்கா அமைக்கும் பணிகள் ஆமை வேகத்திலேயே நகர்கின்றன. இவ்விரு பணிகளையும் விரைந்து முடிக்குமாறு இரு ஒப்பந்த நிறுவனங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கமிஷனர் விசாகன் கூறுகையில், 'மற்ற நகரங்களை விட மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகமாக நடக்கின்றன. தேக்கம் கண்ட இருபணிகளின் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். குறித்த காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்' என்றார்.

மூலக்கதை