கல்கி ஆசிரமத்தில் வருமான வரி ரெய்டு நிறைவு

தினமலர்  தினமலர்
கல்கி ஆசிரமத்தில் வருமான வரி ரெய்டு நிறைவு

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி சாமியார் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

சென்னை, பெங்களூரூ, சித்தூர் நகரங்களில் 40 இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் சுமார் 800 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.44 கோடி ரொக்கம், 90 கிலோ தங்கம், ரூ.20 கோடி மதிப்பு வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்கி ஆசிரமம் பினாமி பெயர்களிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


மேலும், வெளிநாடுகளில் மட்டும் கல்கி ஆசிரமம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகளிலும் கல்கி ஆசிரமம் கணக்கில் காட்டாத முதலீடுகளை செய்துள்ளது. மேலும், சோதனையின்போது 4 ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்கி சாமியார் மகன், மருமகள் ஆகியோர் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், மகன், மருமகள் இருவரும் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை