54 ஆண்டுகளுக்குப் பின்... * சோகத்தில் தென் ஆப்ரிக்கா | அக்டோபர் 21, 2019

தினமலர்  தினமலர்
54 ஆண்டுகளுக்குப் பின்... * சோகத்தில் தென் ஆப்ரிக்கா | அக்டோபர் 21, 2019

ராஞ்சி: டெஸ்ட் அரங்கில் 54 ஆண்டுகளுக்குப் பின் ஒரே தொடரில் இரண்டாவது முறையாக ‘பாலோ ஆன்’ பெற்றது தென் ஆப்ரிக்க அணி. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. 

முதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. டுபிளசி (1), ஹம்ஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கிறது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டுபிளசி (1) போல்டானார். பின் பவுமாவுடன் இணைந்த ஹம்ஜா டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது, ஜடேஜா சுழலில் ஹம்ஜா (62), கிளாசன் (6) போல்டாகினர். அறிமுக ‘சுழல்’ வீரர் நதீம், பவுமாவை (32) வெளியேற்றி அசத்தினார். 

பீட் (4), ரபாடா (0) கைவிட்டனர்.  ஜார்ஜ் (37), நார்ட்ஜே (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, ஜடேஜா, ஷமி, நதீம் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

‘பாலோ ஆன்’ சோகம்

335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை இரண்டாவது இன்னிங்சை தொடருமாறு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. 

* கடந்த 1965ல் சொந்தமண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி, டர்பன், ஜோகனஸ்பர்க் என இரு டெஸ்டில் ‘பாலோ ஆன்’ ஆகி தோற்றது. 54 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஒரே தொடரில் (இந்தியா) இரண்டு முறை (புனே, ராஞ்சி) ‘பாலோ ஆன்’ ஆகி ஏமாற்றியது.

மூலக்கதை