மருத்துவமனையில் எல்கர் * உமேஷ் ‘பவுன்சர்’ தாக்கியது | அக்டோபர் 21, 2019

தினமலர்  தினமலர்
மருத்துவமனையில் எல்கர் * உமேஷ் ‘பவுன்சர்’ தாக்கியது | அக்டோபர் 21, 2019

 ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணி துவக்க வீரர் எல்கர் ‘ஹெல்மெட்’ மீது, பந்து தாக்கியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. 

முதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. டுபிளசி (1), ஹம்ஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, ஜடேஜா, ஷமி, நதீம் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை இரண்டாவது இன்னிங்சை தொடருமாறு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. 

போட்டியின் 10வது ஓவரை உமேஷ் வீசினார். 3வது பந்து பவுன்சராக சென்றது. இதில் தப்பிக்க குனிந்த எல்கரின் வலது பக்க ‘ஹெல்மெட்டில்’ பந்து பலமாக தாக்கியது. உடனடியாக கீழே சரிந்தார் எல்கர். பின் தேநீர் இடைவேளைக்குப் பின் இவர் பேட்டிங் செய்ய வரவில்லை. பந்து தாக்கியதால் தலைசுற்றல் ஏதும் உள்ளதா என சோதனை செய்ய, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இங்கு எல்கருக்கு ‘ஸ்கேன்’ எடுக்கப்பட உள்ளது. 

இதனிடையே ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில் இருந்து எல்கர் விலகினார். புதிய விதிப்படி எல்கருக்குப் பதில், தென் ஆப்ரிக்க அணியின் மாற்று வீரர் புருய்ன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். 

மூலக்கதை