அதிகரிப்பு! கடந்தாண்டை விட 'டெங்கு' பாதிப்பு: சுகாதாரப்பணி தீவிரப்படுத்த 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
அதிகரிப்பு! கடந்தாண்டை விட டெங்கு பாதிப்பு: சுகாதாரப்பணி தீவிரப்படுத்த அட்வைஸ்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால், நோய் தடுப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டுமென, ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் விஜய கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் கோபால், பணிகளை ஆய்வு செய்தார்.அவர் பேசியதாவது:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தயார்நிலையில் இருக்க வேண்டும். பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். மின்தடை ஏற்பட்டாலும், ஜெனரேட்டர் உதவியுடன், குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.வெள்ளம் பாதித்த பகுதிகள் மட்டுமல்லாது, மாவட்டம் முழுவதும், 24 மணி நேரமும், சுகாதாரத்துறை தயார்நிலையில் இருக்க வேண்டும். தேவையான பகுதிகளில், 108 ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைக்க வேண்டும். குளம், குட்டைகள், அணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கரை உடைபட்டால், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, மணல் மூட்டை, பொக்லைன் வாகனங்களை தயார்படுத்தி வைக்க வேண்டும். கடந்த காலங்களில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைகாலத்தில், மழைநீர் தேங்குவதும் டெங்கு பாதிப்புக்கு முக்கிய காரணமாகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கிறது.எனவே, சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நோயை கட்டுப்படுத்த வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை