குறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்! நீர் தேக்கத்தால் டெங்கு அபாயம்!

தினமலர்  தினமலர்
குறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்! நீர் தேக்கத்தால் டெங்கு அபாயம்!

கோவை:குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 185 மாணவர்கள் படிக்கின்றனர். கிட்டத்தட்ட 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பள்ளி வளாகத்தில், மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. மாணவர்கள் வகுப்பறைக்கு, செல்லவே இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று விடுமுறை அறிவித்ததால், எந்த சிக்கலும் இல்லை.இன்று பள்ளி செயல்படவுள்ள நிலையில், மாணவர்கள் உள்ளே நுழையவே முடியாத அளவுக்கு, தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.இப்படி நாள்கணக்கில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கியிருந்தால், கொசு பெருகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால், குழந்தைகள் பாதிக்கப்படுவர். இதுபோன்ற அரசுப்பள்ளிகளில், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை, கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும்.பள்ளி தலைமையாசிரியை சாந்தி கூறுகையில், ''பள்ளிக்கு அருகேயுள்ள தோட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர், மைதானத்துக்கு வருகிறது. தேங்கியிருக்கும் மழைநீர் வெளியேற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் சுப்புலட்சுமி கூறுகையில், ''பள்ளி காம்பவுண்டு சுவரை ஒட்டியுள்ள ரோடு வழியாக, குழாய் பதித்து தான், உள்ளிருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியும். இதுகுறித்து உரிய துறை அலுவலர்களுடன் பேசியுள்ளோம். நிரந்தர தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களின் குழந்தைகள், பாதுகாப்பான பள்ளிகளில் படிக்க, ஏழை குழந்தைகளின் கல்வி கனவு நிறைவேறுவது, இது போன்ற பள்ளிகளை நம்பிதான் உள்ளது.
இவற்றின் நிலைமையும் இப்படியிருந்தால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படித்தான் உயரும்?கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களின் குழந்தைகள், பாதுகாப்பான பள்ளிகளில் படிக்க, ஏழை குழந்தைகளின் கல்வி கனவு நிறைவேறுவது, இது போன்ற பள்ளிகளை நம்பிதான் உள்ளது. இவற்றின் நிலைமையும் இப்படியிருந்தால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படித்தான் உயரும்?

மூலக்கதை