'கோவிலில் காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்':ஹிந்து அமைப்புகள் நிபந்தனை

தினமலர்  தினமலர்
கோவிலில் காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்:ஹிந்து அமைப்புகள் நிபந்தனை

'ஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பனை கைது செய்ய வேண்டும்; அவர், கோவிலில், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ஹிந்து இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள, 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர் காரப்பன், கோவையில் நடந்த கருத்தரங்கில், அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் பற்றி இழிவாக பேசினார்.
இவரை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


ஹிந்து முன்னணியின் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், ''காரப்பன் மீது, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர் சிறுமுகையில் உள்ள ராமர் கோவிலில் மண்டியிட்டு, ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்; இதுதான் எங்கள் கோரிக்கை,'' என்றார்.
பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர், நேற்று, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், 'சிறுமுகை காரப்பன் பேச்சால், ஹிந்துக்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது. கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை இழிவாக பேசி, பொது மக்களிடம் மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரப்பன் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, 'வீடியோ' ஆதாரங்களின் அடிப்படையில், பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், காரப்பன் மீது புகார் அளிக்க, ஹிந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்க முடியாத குற்றம்!


அவரவருக்கு பிடித்த இறை நம்பிக்கை மீது பற்றுகொள்கின்றனர். இதைத் தான், 'அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு' என, திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தினரின் மனது புண்படும்படி, அவர்கள் வணங்கும் கடவுளை இழிவாகப் பேசுவதை ஏற்க முடியாது.-ஏ.அப்துல் ரஜாக், 32, நகைக்கடை உரிமையாளர், மேட்டுப்பாளையம்.

கண்டிக்கத்தக்கது


ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் கடவுள், உயிரினும் மேலானவர். கடவுள்களை இழிவுபடுத்தி பேசுவோரை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். காரப்பனின் பேச்சு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.-ஏ.அப்பாஸ், 35.ஆட்டோ டிரைவர், அன்னுார்.உணர்வுகளை மதிக்கணும்
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே, இந்தியாவின் அடையாளம். இத்தகைய நாட்டில், எந்த மதத்தினரையும் இழிவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதரீதியான பேச்சுகள், சமூகத்தின் ஒற்றுமையையும் சீர்குலைக்கும். - ஜாய்ஸ் மொரின் நாதன், கே.கே.புதுார். - நமது நிருபர் -

மூலக்கதை