பார்லி.,யை சீரமைக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது

தினமலர்  தினமலர்
பார்லி.,யை சீரமைக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜ பாதை, பார்லிமென்ட் கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் திட்டம், அடுத்த கட்டத்தை எட்டிஉள்ளது. டில்லியில் உள்ள பார்லி., கட்டடம், அதைச் சுற்றியிருக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் செயல்படும் அலுவலகங்களுக்கு, 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள், தினமும் வந்து போகின்றனர்.

நவீன வசதிகள்

மத்திய அரசின், அதிகார தாழ்வாரங்களாக கருதப்படும் இந்தப் பகுதியில், டில்லி போலீஸ், தொழிற் பாதுகாப்பு படை, துணை நிலை ராணுவம் ஆகியவற்றின் வீரர்கள் குவிக்கப்பட்டு, எந்நேரமும் பாதுகாப்புடன் இருக்கும்.இப்பகுதியில், இடநெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி, அடிப்படை வசதிகள் குறைவு என பல சிக்கல்கள் இருப்பதால், இவற்றை முற்றிலுமாக சீரமைக்க, மத்திய அரசு முடிவு செய்திருந்தது.இது குறித்து, வல்லுநர்கள், அனைத்து கட்சி, எம்.பி.,க்கள், அரசியல் கட்சிகள் என, பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் 'ராஜ் பாத்' எனப்படும் ராஜ பாதை, 4 கி.மீ., நீளம் கொண்டது. ஜனாதிபதி மாளிகையில் துவங்கி, இந்தியா கேட் வரையிலான இந்தப் பாதை, முற்றிலுமாக மாற்றிஅமைக்கப்படவுள்ளது.தற்போது பிரபலமாக விளங்கும் சாஸ்திரி பவன், உத்யோக் பவன், ரயில் பவன் உட்பட பல மத்திய அரசு அலுவலக கட்டடங்கள், சிறு அறைகளுடன், அந்தக் கால பாணியில் உள்ளதால், அவை இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்படவுள்ளன.
காலதாமதம் வேண்டாம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, இரண்டாம் முறையாக பதவியேற்றதில் இருந்தே, இதற்கான பேச்சுக்கள் அடிபட துவங்கியிருந்த நிலையில், தற்போது, இதன் அடுத்த கட்ட பணிகள், மளமளவென வேகம் பிடித்து வருகின்றன.இது போன்ற விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் துறையில், சிறந்து விளங்கும் நிறுவனங்களிடம், மத்திய நகர்ப்புற அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டனர். ஆறு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, அவற்றில், ஐந்து நிறுவனங்கள் கொண்ட பட்டியல் தயாராகிவிட்டது.இந்நிறுவனங்கள் அளித்துள்ள செலவு பட்டியல், வடிவமைப்பு முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வரும், 2022க்குள் புதிய பார்லிமென்ட் கட்டி முடிப்பது, 2024க்குள் அதிகார தாழ்வாரத்தின் ஒட்டுமொத்த பகுதியையும் சீரமைப்பது என, மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால், ஒப்பந்த பணிகளை தருவதில் காலதாமதம் வேண்டாம் என, அது கருதுகிறது.எனவே, எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணி கிடைக்கும் என்ற தகவல், இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது டில்லி நிருபர் --


மூலக்கதை