மழை முன்னெச்சரிக்கை: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

தினமலர்  தினமலர்
மழை முன்னெச்சரிக்கை: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: அதிக மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள மாவட்டங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்றும், நாளையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து மாவட்டங்களுக்கும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மழை நிலவரம், அணைகளின் நீர் மட்டம் போன்றவற்றை, தினமும் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, அரசுக்கு தினமும் அனுப்ப வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யும் எடுக்க வேண்டும் என, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை