இரட்டை சதம் விளாசினார் ரோகித் இந்தியா 497/9 டிக்ளேர்: தெ.ஆப்ரிக்கா திணறல்

தினகரன்  தினகரன்
இரட்டை சதம் விளாசினார் ரோகித் இந்தியா 497/9 டிக்ளேர்: தெ.ஆப்ரிக்கா திணறல்

ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3  விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்திருந்தது (58 ஓவர்). போதிய வெளிச்சம் இல்லாததால்  ஆட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அகர்வால் 10, புஜாரா 0, கோஹ்லி 12 ரன் எடுத்து வெளியேற, இந்தியா 15.3 ஓவரில்  39 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில் ரோகித்,  ரகானே  இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  ரோகித் 117 ரன், ரகானே 83 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.ரகானே சதத்தை நிறைவு செய்து அசத்தினார். அவர் 115 ரன் எடுத்து (192 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) லிண்டே சுழலில் விக்கெட் கீப்பர் கிளாசன் வசம் பிடிபட்டார். ரோகித் - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 267 ரன் சேர்த்தது. அடுத்து ரோகித்துடன் ஜடேஜா இணைந்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தனர். அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசிய ரோகித், 212 ரன் எடுத்து (255 பந்து, 28 பவுண்டரி, 6 சிக்சர்) ரபாடா வேகத்தில் என்ஜிடி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.சாஹா 24 ரன், ஜடேஜா 51 ரன் (119 பந்து, 4 பவுண்டரி), அஷ்வின் 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய உமேஷ் யாதவ் 31 ரன் (10 பந்து, 5 சிக்சர்) விளாசி லிண்டே சுழலில் கிளாசன் வசம் பிடிபட்டார். இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. நதீம் 1, ஷமி 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் அறிமுக சுழல் லிண்டே 4, ரபாடா 3, நோர்ட்ஜே, பியட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டீன் எல்கர் ரன் ஏதும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்திருந்த நிலையில், முதல் நாளை போன்றே நேற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ஜுபேர் ஹம்சா (0), கேப்டன் டு பிளெஸ்ஸி (1) களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா 488 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை