ஹாங்காங்கில் பதற்றம் போராட்டக்காரருக்கு கத்திக்குத்து மீண்டும் தடையை மீறி பேரணி

தினகரன்  தினகரன்
ஹாங்காங்கில் பதற்றம் போராட்டக்காரருக்கு கத்திக்குத்து மீண்டும் தடையை மீறி பேரணி

ஹாங்காங்: ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்த போராட்டக்காரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, மக்கள் போராட்டம் வெடித்தது. ஒவ்வொரு வார இறுதி நாட்களில் திரளான மக்கள் பொது இடங்களில் கூடி போராட்டம் நடத்தினர். இதனால், சட்ட திருத்தத்தை ஹாங்காங் அரசு நிர்வாகம் வாபஸ் பெற்றது. ஆனாலும், தங்களின் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, ஒவ்வொரு வாரமும் இப்போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஷாப்பிங் மால் அருகில் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த போராட்டக்குழு தலைவர்களில் ஒருவரான 19 வயது ஜிம்மி சாம் மீது கத்திக்குத்து நடந்தது. சுத்தியலாலும் அவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சீனாவுக்கு ஆதரவான 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவி ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தும், முழு ஜனநாயகத்தை கொண்டு வர வேண்டுமெனவும், போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்றும் போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகள் மற்றும் ஷாப்பிங் மால்களை முற்றுகையிட்டு பேரணி நடத்தியதால் பரபரப்பு நிலவியது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை