லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த என்.ஆர்.ஐ.,

தினமலர்  தினமலர்
லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த என்.ஆர்.ஐ.,

புதுடில்லி:இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களில், 25 ஆயிரம் பேர் தாயகம் வந்து ஓட்டளித்துள்ளனர்.
லோக்சபாவுக்கு இந்தாண்டு, ஏப்., மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடந்தது. இதில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அளித்துள்ள ஓட்டுகள் குறித்து, தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இங்கு நடைபெறும் தேர்தலில் ஓட்டுப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவு செய்வதற்கு, 99 ஆயிரத்து, 807 பேர் பதிவு செய்திருந்தனர். இதில், 7,943 பேர் பெண்கள்; 14 பேர் திருநங்கையர்.
ஆனால், இதில், 25 ஆயிரத்து, 606 பேர் மட்டுமே, இந்தியாவுக்கு வந்து தங்களுடைய சொந்த ஊர்களில் ஓட்டளித்தனர். இதில், 1,148 பேர் பெண்கள்.தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, டில்லியில், 336 பேரும்; புதுச்சேரியில், 272 பேரும்; மேற்கு வங்கத்தில், 34 பேரும் பதிவு செய்திருந்தனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட ஓட்டளிக்கவில்லை.நாட்டிலேயே மிகவும் அதிகமாக, கேரளாவில், 85 ஆயிரத்து, 161 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அதில், 25 ஆயிரத்து, 91 பேர் ஓட்டளித்தனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை