மகாராஷ்டிராவில் இறுதிகட்ட பிரசாரம்: பேசிக்கொண்டே சரிந்த பாஜ அமைச்சர்...தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் இறுதிகட்ட பிரசாரம்: பேசிக்கொண்டே சரிந்த பாஜ அமைச்சர்...தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில பெண் அமைச்சர் திடீரென மயக்கமடைந்து சரிந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.  மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி  நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நேற்று இறுதிகட்ட பிரசார நாள் என்பதால், பாஜவை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், மகாராஷ்டிரா மாநில பாஜ தலைவர்  சந்திரகாந்த் பாட்டீல் கோத்ரூட் தொகுதியிலும், பார்லி தொகுதியில் போட்டியிடும் அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரசாரம்  மேற்கொண்டனர். அப்போது, பீட் மாவட்டத்தில் பார்லியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, அமைச்சர் பங்கஜா முண்டே திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்தார். அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், அருகிலுள்ள மருத்துவமனையின் தீவிர  சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவர், தற்போது குணமடைந்து வருவதாக பாஜ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.பங்கஜா முண்டேவுக்கும், தனது உறவினரும், தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான தனஞ்சய் முண்டே இடையே போட்டி நிலவுகிறது. இதுகுறித்து பாஜ செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாதாயே கூறுகையில், ‘முண்டே தொடர்ந்து  பிரசாரத்தில் ஈடுபட்டதால், திடீரென மயக்கமடைந்தார். அவரது உடல்நிலையை பாதிக்கக்கூடும் என்பதால், அடுத்த கூட்ட பிரசார திட்டம் கைவிடப்பட்டது. அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு குணமடைந்து வருகிறார்’’  என்றார்.

மூலக்கதை