சில தனியார் மருத்துவமனையில் நடக்கும் விஷயங்கள்...! பீதியை கிளப்புகிறார் திவ்யா சத்யராஜ்

தினமலர்  தினமலர்
சில தனியார் மருத்துவமனையில் நடக்கும் விஷயங்கள்...! பீதியை கிளப்புகிறார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா; பிரபல ஊட்டச்சத்து நிபுணர். சில தனியார் மருத்துவமனையில் நடக்கும் விஷயங்கள், பயங்கரமாக இருக்கிறது என, பீதியை கிளப்புகிறார்.

அவருடன் பேசியதிலிருந்து:

பிரபல நடிகரின் மகளான நீங்கள், மருத்துவம் சார்ந்த துறையை தேர்ந்தெடுத்தது ஏன்?

சிறுவயதில் இருந்தே, உடல்நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வேன். நம் வாழ்க்கைக்கு முக்கிய தேவை இரண்டு. ஒன்று உடல் ஆரோக்கியம்; மற்றொன்று பணம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், உழைக்க முடியும்; பணம் சம்பாதிக்க முடியும். அந்த அடிப்படையில் தான், ஊட்டச்சத்து நிபுணர் ஆனேன். இது, என் கனவும் கூட.

மருத்துவமனைகளில் ஆராய்ச்சி துவங்குவதற்கான காரணம்?
குறைந்த வருமானம் உள்ளோரும், ஆரோக்கியமாக இருக்கும் வகையில், மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனையில், என் ஆராய்ச்சியை துவக்கினேன். இதில், நிறைய விஷயங்கள் கிடைத்தன. ஐந்தில், மூன்று கர்ப்பிணிகள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். மருத்துவமனைகளில், அதற்கான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. மருத்துவமனை வளாகம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளில், போதிய சுகாதாரம் இல்லை. தலையணை, போர்வை வசதிகளும் போதுமானதாக இல்லை. மழைக்காலத்தில் வரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகளும் போதிய அளவு இல்லை. மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில், சில மருந்துகள் காலாவதியான பின்னும் விற்கப்படுகின்றன. இது குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் போதிய அளவு இல்லை. இந்த விஷயத்தில், வியாபாரிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற பல விஷயங்கள், என் ஆராய்ச்சியில் தெரியவந்தன.

மருத்துவமனை குறித்து உங்கள் பொதுவான கருத்து?
மருத்துவமனைக்கு சென்றால், நோய் அதிகமாகும் அல்லது பர்ஸ் காலியாகும் என்ற எண்ணமே, இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும், யாருக்காவது ஒருவருக்கு நிச்சயமாக, இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்...
சுகாதார அடிப்படையில், அரசு மருத்துவமனைகள் பின்தங்கியிருந்தாலும், பல விஷயங்களில், மருத்துவத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. சுகாதார விஷயத்தை எளிதில் மாற்றி விடலாம். தனியார் மருத்துவமனையை பொறுத்தவரை, சிலவற்றின் செயல்பாடு மிகவும் பயங்கரமாக இருக்கிறது. நான் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கு முக்கிய காரணமே, சில மருந்துகளும், சில தனியார் மருத்துவமனையின் செயல்பாடுகளும் தான். எனக்கு தெரிந்த நபரின் உறவினர் ஒருவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜீரண கோளாறால் பாதித்த அவருக்கு, நான்கு முறை, எம்.ஆர்.ஐ., - இரண்டு முறை, சி.டி., ஸ்கேன் எடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள், மக்களை பணம் கறக்கும் இயந்திரமாக தான் பார்க்கின்றன.

பிரதமருக்கு கடிதம் எழுதியதன் விளைவு?
என் கடிதத்திற்கு, பிரதமரிடம் இருந்து, எந்த பதிலும் வரவில்லை. ஆனால், நான் குறிப்பிட்டு எழுதிய அந்த மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது.

ஆரோக்கிய வாழ்க்கைக்கு கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?
வெளியில் சாப்பிடுவதை, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும். போதுமானவரை, வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். அஜினமோட்டோ, நுாடுல்ஸ் பயன்படுத்துவதில், அதிக கவனம் தேவை.

திடீரென அரசியல் பக்கம் உங்கள் கவனம் சென்றது ஏன்?
நம் நாட்டில், 39.4 சதவீத குழந்தைகளுக்கு போதுமான வளர்ச்சி இல்லை. அதே போல், 12 - 23 மாத குழந்தைகளில், 62 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே, தடுப்பூசி கிடைக்கிறது. இது போன்ற குறைகளை போக்க, நான், 'வேர்ல்ட் விஷன்' அமைப்போடு இணைந்து, ஆராய்ச்சி செய்து வருகிறேன்.நான் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால், என் கவனம் உடல் ஆரோக்கியம் மீது மட்டுமே இருக்கிறது. சுகாதார அமைப்பின் மேல், மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. இதை, மாற்ற வேண்டும். அரசியல்வாதிகள், தங்களை பிரபலப்படுத்துவதிலேயே கவனம் கொள்கின்றனர்; மக்களை கண்டுகொள்வதில்லை. நாம் ஒரு அமைப்பில் இருந்தால் தான், எந்த ஒரு சிஸ்டத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். இதற்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டேன்.

அப்படி என்றால், இனி நீங்களும் 'டுவிட்டர்' அரசியலில் இறங்கி விடுவீர்கள்... அப்படித்தானே?
'இன்ஸ்டாகிராம், டுவிட்டர்' தான், களம் என, பலர் நினைக்கின்றனர். நான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை. சமீபத்தில் ஊட்டச்சத்து தொடர்பாக, நான், 'யூ டியூப்'பில் வெளியிட்ட வீடியோவில் சிலர், 'நீங்கள் அணிந்திருந்த சுடிதார், கம்மல் நன்றாக இருக்கிறது' என, கமென்ட் செய்திருந்தனர்.நாம் சொல்ல வந்த விஷயம், சில நேரம் மாறிப்போவதால், என் துறை சார்ந்த விஷயங்களை, சமூக வலைதளங்களில் பதிவிடுவதில்லை. மக்களை நேரடியாக சந்தித்து பேசுவதே எனக்கு பிடிக்கும். அப்போது தான், அதன் பலன், மக்களை எளிதில் சென்றடையும்.

இதுவரை சம்பாதித்தது?
அனைத்தையும் நான் வெளிப்படையாக பேசுவதாலும், டாக்டர்கள் சிலர் வியாபாரம் சார்ந்து இருப்பதாலும், 90 டாக்டர்களில், 70 பேருக்கு என்னை பிடிக்காது.

அரசியலில் பிடித்த தலைவர்?
நான் கம்யூனிசம் படித்து வளர்ந்தவள். கம்யூனிசம் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த தலைவர் நல்லக்கண்ணு அய்யா. நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்; அதுகுறித்து, விரைவில் அறிவிப்பேன்.

உங்களுக்கு அப்பாவின் ஆதரவு எப்படி உள்ளது?
அப்பாவின் பெயர், புகழ், பணம் ஆகியவற்றை, நான், என் அரசியல் வளர்ச்சிக்காக பயன்படுத்த மாட்டேன். என் உயிர் தோழன் என் அப்பா.

மூலக்கதை