நம்பிக்கை ஒளிக்கீற்றில் தீபாவளி!

தினமலர்  தினமலர்
நம்பிக்கை ஒளிக்கீற்றில் தீபாவளி!

அடுத்த ஞாயிறு தீபாவளி. இந்தியாவில் மீண்டும் மக்கள் நுகர்பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்களா...சந்தை என்ன சொல்கிறது?

இந்தியாவில், மக்கள் தங்கள் பையில் இருந்து பணத்தைச் செலவு செய்ய வே மாட்டேன் என்கிறார்கள். எதிர்காலத்துக்காக சேமிக்கிறார்கள்; பயப்படுகிறார்கள், என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன.அதாவது, பொருளாதார தேக்கம், மந்தநிலை அல்லது, சரிவுக்கு, வாடிக்கையாளர்களின் ஆர்வமின்மையே காரணம் என நிதித் துறை நிபுணர்கள் கணித்து வந்தனர்.ஆட்டோமொபைல் துறையில் தொடங்கி, எண்ணற்ற துறைகளில் விற்பனை சுணங்கிப் போய்விட்டது என, புள்ளிவிபரங்கள் வெளியாகின.

இந்நிலையில், எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தது, பண்டிகை காலத்தை.கேரளத்தின் ஓணம் பண்டிகையில் தொடங்கி, நவராத்திரி, தசரா, துர்கா பூஜை, தந்தேராஸ் என, தொடர்ந்து, தீபாவளியில் வந்து முடிவது தான், பண்டிகைக் காலம் என்பது. இந்தக் காலத்தில் நுகர்வோர் எவ்வளவு வாங்குகின்றனர் என்பதே முக்கிய மானது. ஏனெனில், வணிகர்களின் ஆண்டு விற்பனையில், 40 சதவீதம், பண்டிகைக்கால விற்பனையில் இருந்து பெறுவது தான்.நடப்பு பண்டிகைக் காலம்நம்பிக்கைக் கீற்றோடு தொடங்கியிருக்கிறது, 2019 பண்டிகைக் காலம். இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் தெரிவிக்கும் செய்திகள், உற்சாகம் கொள்ள வைக்கின்றன. நவராத்திரியை ஒட்டி ஆடைகள், அலைபேசிகள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் பெருமளவு விற்பனை ஆகியிருக்கின்றன.அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, சராசரியாக, 10 முதல், 14 சதவீத அளவுக்கு, நவராத்திரியை ஒட்டியே விற்பனை அதிகரித்துள்ளது.

பெரிய வணிக வளாகங்களிலும், 4 முதல், 6 சதவீத அளவுக்கு, மக்கள் வரத்து உயர்ந்துள்ளது. இதனால், கடைகளில் ஆகும் விற்பனை அளவும், 8 முதல், 12 சதவீத அளவுக்கு பெருகியிருக்கிறது.இந்தியாவின் மிகப்பெரும் வணிகத் தொடர் நிறுவனமான ரிலையன்ஸ் ரீட்டெயில், இன்னும்உற்சாகமான செய்தியைச் சொல்கிறது.இந்தப் பண்டிகைக் காலத்தில், அதாவது, 18ம் தேதி வெள்ளிக்கிழமை வரையான காலத்தில், அதன் வருவாய், 27 சதவீதம் உயர்ந்து, 41,202 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. வாடிக்கையாளர் வரத்து, 11 சதவீதம் உயர்ந்துள்ளது.பலசரக்குகளின் விற்பனை, 30 சதவீதமும், பால் விற்பனை, 53 சதவீதமும், குர்தா விற்பனை, 43 சதவீதமும் உயர்ந்ததாக, ரிலையன்ஸ் ரீடெயில் தெரிவித்துள்ளது. விலையுர்ந்த பொருட்களையும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை, கடந்த காலாண்டில், 29 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்த தீபாவளியை ஒட்டி அதிகம் விற்பனையான பொருட்களில் ஒன்று அலைபேசிகள்.சென்ற ஆண்டு பண்டிகை காலத்தைவிட, இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அலைபேசிகள் இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாகத் தெரிவிக்கிறது, இணைய வணிக நிறுவனமான அமேசான்.சாம்சங், ஒன்பிளஸ், ஆப்பிள், ஜியோமி, விவோ போன்ற அலைபேசி பிராண்டுகள், இந்த ஆண்டு மட்டும், 15 மடங்கு விற்பனையைப் பெருக்கியுள்ளன.ஒன்பிளஸ் அலைபேசிகள், 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாக, சாம்சங் விற்பனை, 5 மடங்கு உயர்ந்துள்ளது.சீன அலைபேசியான ஜியோமி, 53 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது ஒரு நிமிடத்தில், 525 சாதனங்கள் விற்பனை ஆகியுள்ளன.குளிர் சாதனமான, ஏ.சி., விற்பனையும் பெரும் சரிவைச் சந்திக்கவில்லை என்கிறார், ஹிட்டாச்சி ஏர்கண்டிஷனிங் இந்தியாவின் தலைவர் குர்மீட் சிங். ஏ.சி.,யில் புதுமையான விஷயங்கள் என்னென்ன வந்திருக்கின்றன என்பதைக் கவனித்து, தரத்துக்கும் வாரண்டிக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார், குர்மீட்.சொகுசு ஓட்டல்கள் விஷயத்திலும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. அறைகளின் வாடகையில் விதிக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., விகிதம் குறைக்கப்பட்டதால், முன்பதிவுகள் அதிகமாகி வருகின்றன.ஏற்கனவே, 119 சொகுசு ஓட்டல்களை நடத்திவரும், மேரியட் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்த ஆண்டில் மேலும், 6 புதிய ஓட்டல்களையும், 2020ல், 20 புதிய ஓட்டல்களையும் திறப்பதற்கு திட்டமிட்டு உள்ளது.உயரும் ரொக்கப் புழக்கம்பொருளாதாரம் நம்பிக்கையளிப்பதற்கான மற்றொரு சான்று, பணப்புழக்க கணக்கில் இருந்து வருகிறது.

பொதுவாக, பண்டிகை காலத்தில் ரொக்கப் பணத்தின் புழக்கம் அதிகரிக்கும்.அக்டோபர், 11 உடன் முடிந்த வாரத்தில், ரொக்கப் புழக்கம், 0.94 சதவீதம் அதிகரித்து, 22.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய வாரம், 0.90 சதவீதம் அதிகரித்தது. இதற்கும் முந்தைய வாரம், ரொக்கப் பணத்துக்கான தேவை, 0.06 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. தீபாவளிக்கு முந்தைய வாரம், ரொக்கப் பணத்துக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என, கணிக்கப்படுகிறது.இவையெல்லாம் ஒரே ஒரு செய்தியைத் தான் சொல்கின்றன.மக்களின் நுகர்வு கலாசாரம், முற்றிலும் மறைந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் பண்டிகை காலத்துக்காக, தங்கள் சேமிப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.அல்லது,

இனிமேல் சூழ்நிலை நன்கு மாறக்கூடும் என்ற நம்பிக்கையில், செலவழிக்கத் துணிந்து, வெளியே வருகிறார்கள்.எதுவாக இருந்தாலும், தீபாவளி, நம்பிக்கை ஒளிக்கீற்றோடு தொடங்கிஇருக்கிறது.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்[email protected]

மூலக்கதை